‘வேர்ல்டு டூர் பைனல்’ டென்னிஸ்: ரோஜர் பெடரர் சாம்பியன்!

ஏ.டி.பி., ‘வேர்ல்டு டூர் பைனல்’ டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார்.

லண்டனில், ஏ.டி.பி., ‘வேர்ல்டு டூர் பைனல்’ டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங்கில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ‘டாப்-8’ வரிசையில் உள்ள வீரர்கள் பங்கேற்றனர். ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ஜோ-வில்பிரட் சோங்காவை சந்தித்தார்.

முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய பெடரர், ‘டை-பிரேக்கர்’ வரை நீடித்த இரண்டாவது செட்டை 6-7 எனக் கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட பெடரர், 6-3 என தன்வசப்படுத்தினார்.

இறுதியில் பெடரர் 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக (2003-04, 2006-07, 2010-11) சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் செக்குடியரசின் இவான் லெண்டல் (1981-82, 1985-87), அமெரிக்காவின் பீட் சாம்ப்ரஸ் (1991, 94, 96-97, 99) ஆகியோரை பின்தள்ளி, முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார்.