1960களில் தெற்கு மும்பையில் உள்ள தெருக்களில் இளம் வயதுடைய பால் தாக்கரே நடந்து செல்கிறார். அவர் பார்க்கும் இடமெல்லாம் தமிழில் எழுதப்பட்ட பதாகைகள் இருக்கின்றன. இந்த பதாகைகளை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நிற்கும்போது, தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தமிழில் தாக்கரேவை பார்த்து கோபமான முகத்துடன் கத்துகிறார். இப்படியாகத்தான், ‘தாக்கரே’ திரைப்படம் மும்பையில் வாழும் தமிழர்களை காண்பிக்க தொடங்குகிறது.
சிவசேனை எம்.பி சஞ்சய் ராவுட் மற்றும் வையகாம் 18 நிறுவனம் சேர்ந்து தயாரித்த இந்த திரைப்படமானது, தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் நிலையில் பிரச்சாரப்படமாக வெளியாகியுள்ளது.
சிவசேனை தலைவரை ஒரு ‘ஹீரோவாக’ சித்தரிக்கும் இப்படம், மும்பையில் உள்ள தமிழர்களை தவறானவர்களாக காண்பிக்கிறது.
- தாக்கரே தென்னிந்தியர்களை வெறுத்தது ஏன்? – நிழலும், நிஜமும்
- பாகிஸ்தானிய நடிகரை வைத்து படம் தயாரித்தால் ராணுவ நலனுக்கு நிதி அளிக்கவேண்டும்: ராஜ் தாக்கரே நிபந்தனை
மும்பையை ‘ஆக்கிரமிக்க’ வந்த ‘வெளிநபர்’களாக தமிழர்கள் காண்பிக்கப்படுகிறார்கள். உள்ளூர் மகாராஷ்டிரா மக்களிடம் இருந்து தமிழர்கள் வேலையை பறித்துக் கொள்பவர்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் தமிழர்கள் இருப்பை பெரிதுப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது போலவே இது தோன்றுகிறது.
மறுபக்கத்தில், உள்ளூர் மராத்தி பேச்சாளர்கள் சாதுவாகவும், ஏழ்மையானவர்களாகவும், வெளிநபர்களால், அதுவும் முக்கியமாக தென் இந்தியர்களால் நசுக்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
முதலில் தாக்கரே ‘மார்மிக்’ என்ற பத்திரிகையை தொடங்குகிறார். பின்னர், மராத்திய மண்ணின் மக்களின் உரிமையை காப்பதற்காக ‘சிவசேனை’ என்ற அரசியல் அமைப்பு ஒன்றை அமைக்கிறார்.
தாக்கரேவின் ஆக்ரோஷமான பேச்சை கேட்கும் உள்ளூர் இளைஞர்கள், தென் இந்தியர்களின் குடியிருப்புகளை தாக்குகிறார்கள்.
இதில் சோகமான பகுதி என்னவென்றால், தனது சைக்கிளில் இட்லி விற்கும் தென் இந்திய நபர் ஒருவரை, தாக்ரேவின் ஆதரவாளர்கள் கடுமையாக மிரட்டுகின்றனர். அந்த இட்லி விற்கும் நபர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார். அவர் விற்க வைத்திருந்த சாம்பார் முழுவதும் தரையில் கொட்டிவிடுகிறது.
அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு தோன்றியது இதுதான். இந்த நபர் யார் வேலையை பறித்தார்? அவர் அவரது தொழிலை அல்லவா செய்துகொண்டிருந்தார்? அவர் உழைத்துதானே சம்பாதித்துக் கொண்டிருந்தார்? அவருக்கு ஏன் இந்த தண்டனை? அந்த பாவப்பட்ட இட்லி விற்கும் நபர் உயிருக்கு பயந்து ஓடும்போது, அந்தக் காட்சியை பார்க்கும் மராத்திய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தார்களா? இதுதான் தாக்ரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் வெற்றியா? அல்லது இதுதான் தோல்வியா?
‘சப்தமிட்டு தென் இந்தியர்களை துரத்துங்கள்’
இந்தப்படம் முழுக்க வன்முறை நிறம்பியிருக்கிறது. மேலும், அந்த வன்முறைகளை நியாயப்படுத்த பல வெட்கமில்லாத விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தென் இந்தியர்களை வில்லன்களாக காண்பிக்காவிட்டால், அவர்களை தாக்குவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
லுங்கி அணிபவர்கள் என தென் இந்தியர்களை விவரிக்கிறார் தாக்கரே. இந்த வசனத்திற்கு கர்நாடக மாநிலத்தின் ‘ஷெட்டி’களும், தமிழ்நாட்டின் ‘மதராசி’களும் ஒன்றுதான். இந்த படத்தை பொறுத்தவரை, ‘அண்ணா’ என்று அழைக்கப்பட்டு, கறுப்புத் தோல், அடர்த்தியான தாடி வைத்து, லுங்கி அணிந்து, காஃபி குடித்து, இட்லி உண்ணும் ஒருவர் ‘மதராசி’ எனப்படுகிறார். இந்த குழப்பம் திரைப்படம் முழுவதும் இருக்கிறது.
தென் இந்தியர்கள் அவர்களுக்கே உண்டான பாணியில் ஆங்கிலம் பேசுபவர்கள், பல்வேறு அலுவலகங்களில் முதலாளிகளாக காண்பிக்கப்படுகின்றனர். மும்பையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு தாக்ரே, கார்டூனிஸ்டாக இருக்கும்போது, அங்கிருக்கும் தென் இந்திய முதலாளி, முதுகெலும்பு இல்லாத சந்தர்ப்பவாதியாக காட்டப்பட்டுள்ளார்.
திரைப்படம் நகர நகர, வில்லன்கள் மாறுகிறார்கள். தென் இந்தியர்களின் இடத்தில் முஸ்லிம்கள். மராத்தி மானு என்பது இந்துத்வாவாக மாறுகிறது. தாக்ரேவின் அரசியல் ‘அவர்கள் Vs நாங்கள்’ என்று தொடர்கிறது.
தமிழர்களுக்கு எதிராக இப்போது சிவசேனை ஏதும் பேசுவதில்லை என்றாலும், 1960களின் நினைவை இத்திரைப்படம் தந்து செல்கிறது. 2010ஆம் ஆண்டு பால் தாக்கரே, நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று தமிழகத்தில் அவரது பணிக்காக பாராட்டினார். எனினும், மும்பையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை பிரச்சாரம் நடத்தியே சிவசேனை என்ற கட்சி வளர்ந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது.
-BBC_Tamil