“ ‘ஒருதலை ராகம்’ முதல் ‘பரியேறும் பெருமாள்’ வரை… தமிழ் சினிமாவின் லேட் பிக்கப் ஹிட்ஸ்!”

படம் வெளியானபோது அதற்கான வரவேற்பு எதிர்ப்பார்த்த அளவுக்கு இருக்காது. ஆனால், ஓரிரு வாரங்களில் அந்தப் படம் குறித்த பேச்சு ஊரெங்கும் பரவி, ஒரு நிலையில் அது வெற்றிப் படமாகும். அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிக்கப் ஆகி, ஹிட் ஆன படங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வரும் சில நவீன காலத்துப் பாடல்கள் குறித்து ஒரு பொதுவான கருத்து உண்டு. அந்தப் பாடல்களை முதல்முறையாகக் கேட்கும்போது நம்மைப் பெரிதாக அவை கவராது. ஆனால், தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்போது, அவற்றிலுள்ள இசையின் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விழுங்கி வேறு உலகத்துக்கு எடுத்துச் சென்றுவிடும். இவற்றை இசை ரசிகர்கள் ‘ஸ்லோ பாய்சன்’ பாடல்கள் எனச் செல்லமாக அழைப்பார்கள். இந்த ஸ்லோ-பாய்சன் நிலை பாடல்களுக்கு மட்டுமல்ல, சில படங்களுக்கும் தமிழ் சினிமாவில் உள்ளன.

படம் வெளியானபோது அதற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. ஆனால், ஓரிரு வாரங்களில் அந்தப் படம் குறித்த பேச்சு ஊரெங்கும் பரவி, ஸ்லோ பாய்சன்போல் ஒரு நிலையில் வெற்றிப்படமாகும். அப்படிப்பட்ட படங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒருதலை ராகம்

டி.ராஜேந்தர் எனும் பெரும் கலைஞனை உலகுக்கு அடையாளம் காட்டிய படம் இது. அவருடை மேடைப் பேச்சுகள், நேர்காணல்களை வைத்து, தற்போது சமூக வலைதளங்களில் டி.ஆரைக் கலாய்ப்பவர்கள், ஒருமுறை இந்தப் படத்தைப் பார்த்தால், இவரையா கேலி செய்தோம் என யோசிப்பார்கள். மூடப்பட்ட அரங்கிலிருந்த சினிமாவை பாரதிராஜா பொட்டல் காடுகளுக்கு நடுவே புடவைகட்டி ஓடவிட்டாரென்றால், ராஜேந்தர் கல்லூரிக்கு அனுப்பி ‘டபுள் எம்.ஏ’ படிக்க வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான தொடக்கப்புள்ளி ‘ஒருதலை ராகம்’. இந்தப் படம் ரிலீஸான அன்று கல்லூரி வகுப்பைக் கட் அடித்துவிட்டு நேரத்தைப்போக்க, சில மாணவர்கள் திரையரங்குக்குச் சென்றனர். படம் முடிந்து வெளியே வந்தவர்கள், அடுத்த ஒரு வாரம் முழுக்கப் பேசியது, ‘ஒருதலை ராகம்’ பற்றி மட்டுமே! அப்படி முதல் காட்சியைப் பார்த்த சில கல்லூரி மாணவர்களின் வாய்வழி வார்த்தையால், ஒரே வாரத்தில் அரங்கம் நிரம்பிய கூட்டத்தைப் பார்த்து, பின்னாளில் வெற்றிப்படமானது.

சேது

இயக்குநருக்கு இது முதல் படம், ஹீரோவோ ராசியில்லாத நடிகர் என்று பலரால் ஓரம் கட்டப்பட்டவர், பிற நடிகர்களில் சிவகுமாரைத் தவிர பெரும்பாலானோர் சினிமாவில் புகழைப் பார்க்காதவர்கள். இப்படி இருக்க, கதையையும் இளையராஜாவின் இசையையும் மட்டுமே நம்பி வெளியான படம் ‘சேது’. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற இந்தப் படம் எடுத்துக்கொண்டது இரண்டு வாரம். தோல்வி என்று எண்ணிய படம் வெற்றியானது. ராசியில்லை என்று சொல்லப்பட்ட நடிகர் சிறந்த நடிகர் ஆனார். இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு (இது இவருக்கு மூன்றாவது படம்) என இப்படம் வெளிக்கொண்டு வந்த திறமைகள் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர்கள் ஆனதுதான், இந்தப் படத்தின் உண்மையான வெற்றி.

சுப்ரமணியபுரம்

பாலா, அமீர் வகையறாவில் வந்தவர்தான், இந்தப் படத்தின் இயக்குநரும் ஹீரோக்களில் ஒருவருமான சசிகுமார். கேங்ஸ்டர் படம் என்றால் மும்பையிலும் வடசென்னையிலும் மட்டும்தான் எடுக்கப்படும் என்று நம்பிக்கொண்டிருந்த சினிமாவின் இலக்கணத்தை உடைத்து, மதுரை நகரத்து சந்துகளில் ‘அவனக் கொல்லணும்’ என்ற வெறியோடு சுற்றும் இளைஞர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியது ‘சுப்ரமணியபுரம்’. சாதாரண கேங்ஸ்டர் படம்போல ஆயுதங்களைக் கடத்துபவர்கள், அடியாளாக இருப்பவர்கள், ஆள் கடத்தல் செய்பவர்கள் என இல்லாமல், ஏன் அப்படி ஆகிறார்கள் என்பதை அலசிய படம். காதல், நட்பு, துரோகம், பகை, பழிதீர்த்தல் என ஓர் உலகத்தையே உள்ளடக்கியது இப்படம். முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் 40 பிரிண்டுகள் அதிகப்படுத்தப்பட்டு, பின்னாளில் ஒரு க்ளாஸிக் படமானது. இந்தப் படம்தான் தனது ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்துக்கான இன்ஸ்பிரேஷன் என இன்றும் குறிப்பிடுவார் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். அவர், அந்தப் படத்தில் பாலா, அமீர், சசிகுமாருக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் தொடங்குவார்.

பரியேறும் பெருமாள்

இப்படம் மூலமாக, இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய அரசியல், வலி, சமூகக் கட்டமைப்பின் அடிப்படைச் சிக்கல் என எல்லாம் சேர்ந்து இது வெற்றி பெறுவதற்கான காரணத்தைப் பலப்படுத்தின. ஒரே வாரத்தில், ரிலீஸான பெரும்பான்மைத் திரையரங்குகளில் சின்ன ஸ்கிரீனிலிருந்து, மல்டி ஸ்டாரர் படமான ‘செக்கச்சிவந்த வானம்’ ஓடிக்கொண்டிருந்த மெயின் ஸ்கிரீனுக்கு மாற்றப்பட்டது இந்தப் படம். ‘சேது’வுக்குப் பிறகு இப்படியொரு படம் எல்லா திரையரங்குகளையும் ஆக்கிரமித்துக்கொண்டது, ‘பரியேறும் பெருமாள்’ ரிலீஸுக்குப் பிறகுதான். அதில் தொடங்கிய வெற்றி, உலகின் பல முக்கியமான திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தைக் கொண்டுசெல்வதில் தொடர்ந்தது, இன்னும் தொடர்கிறது.

ஆயிரத்தில் ஒருவன்:

‘புதுப்பேட்டை’யைப் போல, செல்வராகவன் இயக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மக்களிடையே சென்று சேர்ந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்தத் தாமதத்துக்குக் காரணமாக செல்வா-வெறியர் படை சொல்லிக்கொள்வது, ‘அவர் காலம் கடந்து யோசித்துவிட்டார்’ என்று. அந்தக் காலக் கட்டத்தில் தமிழில் அப்படியொரு போர்த் தந்திரம் கொண்ட திரைக்கதையோடு யாரும் படம் எடுத்ததில்லை என்றே சொல்லலாம். ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘பாகுபலி’ முதல் பாகம் வெளியானது. அந்த சமயத்தில்தான் ‘ஒருவேளை பாகுபலி அளவுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பட்ஜெட் இருந்திருந்தா’ என செல்வா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னையின் சில திரையரங்குகள் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை மறுவெளியீடு செய்தனர். காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடின.

அன்பே சிவம்:

மனிதகுல வரலாற்றில், பதில் அறியப்படாத கேள்விகள் பல உள்ளன. ‘ஹிட்லர் எப்படி இறந்தார்?’, ‘பெர்முடா ட்ரையாங்கிளின் ரகசியம் என்ன?’, ‘வாத்தியார் படத்தில் வடிவேலு எதுக்கு சரிபட்டு வரமாட்டார்?’ என அந்தப் பட்டியல் நீளும். அதில் கண்டிப்பாக இந்தக் கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் எனக் கமல் ரசிகர்கள் சொல்வது, “அன்பே சிவம் ஏன் ஓடல?”. நல்ல கதைக்களம், நல்ல திரைக்கதை, சிறந்த நடிகர்கள், நல்ல பாடல்கள், சமூகத்தின் கண்களைத் திறந்து வைக்கும் க்ளைமாக்ஸ் என, ஒரு ஹிட் படத்துக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய படத்துக்கா இப்படியொரு முடிவு என்பதே பல கமல் ரசிகர்களின் ஆதங்கம். இதற்குக் காரணமாக கமலே ஒருமுறை பேட்டியொன்றில், “படத்தின் புரமோஷனைச் சரியாகச் செய்யவில்லை. கிரணும் நானும் கயிற்றில் தொங்கி டூயட் பாடும் ஸ்டில்களை வைத்து போஸ்டர் அடித்தால், படத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்று மக்களுக்கு எப்படித் தெரியும்?”, எனக் கூறினார். என்றாலும், இன்றளவும், தமிழின் முன்னணியான சில ஃபீல்-குட் படங்கள் என்ற லிஸ்ட்டை உருவாக்கினால், அதில் ‘அன்பே சிவம்’ கண்டிப்பாக, ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-cinema.vikatan.com