மொழி என்பது ஒரு இனத்தின் முகம். அதுவும் தமிழ்மொழி போன்ற உலக செம்மொழியை தாய்மொழியாகக் கொண்டது தமிழினம். அதன் அருமை பெருமைகளை உணர்ந்தும் உணராமலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது தமிழ்மொழியின் நிலைத்தன்மை மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை எதிர் கொள்ளும் வகையில் தமிழ்மொழிக்கான காப்பகத்தை மலேசிய அரசாங்கம் அமைத்துள்ளது.
பிற இனத்தவர்களோ குறிப்பாக மலாய்க்காரர்களுக்கு சுதந்திரத்துக்கு முன்பே தங்கள் மொழியை காக்க மலாய்மொழி காப்பகம் (Bahasa Dewan dan Pustaka) நிறுவப்பட்டது. சீனர்களுக்கும் அவர்களின் மொழிக்கான காப்பகம் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால், 3.5.2019இல் தான் மலேசிய மண்ணில் தமிழ்மொழிக்கான காப்பகம் அறிமுகம் Dewan Bahasa dan Pustaka கட்டிடத்தில் தொடக்க விழாவுடன் சிறப்பாக நடைப்பெற்றது ஒரு வரலாற்று திருப்புமுணையாகும் என்கிறார் தமிழ் எங்கள் உயிர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தியாகு லோகநாதன்.
இதில் துணை கல்வியமைச்சர் தீயோ நீ சிங், முன்னாள் காவல் துறை கமிசனர் தெய்வீகன் ஆறுமுகம், தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரவியம் மருதை, கல்வி அமைச்சின் முனைவர் குமரவேலு, சீனமொழி காப்பகத்தின் தலைவர் கோ சாங் சியோங் மற்றும் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, கிராமபுற மேம்பாட்டுத்துறையின் துணையமைச்சர் சிவராசா ராசையா ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சீன மொழி மற்றும் தமிழ்மொழி காப்பகங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, தீயோ நீ சிங் முன்னிலையில், தெய்வீகனும் கோ சாங் சியோங்கும் கையெழுத்திட்டனர்.
மலேசிய தமிழ்மொழி காப்பகம் தூயத்தமிழ் சொற்களையும், அதன் பயன்பாடையும் ஆழப்படுத்துவதோடு, தமிழிலிருந்து மற்ற மொழிக்கு பெயர்படுத்தலுக்குமான விடயங்களில் மும்முரம் செலுத்துவதும், மொழியை சீர்படுத்தி அதன் சரியான சொல்லாக்கத்தை நிறுவுவதன் வழி அந்த மொழி சிதையாமல் காக்கவும் செயலாற்றும். இது போன்ற செயல்களை முன்னெடுத்துச் செல்வதே காப்பகத்தின் முதன்முதல் வேலையாக இருக்க வேண்டும்.
அவ்வகையில் இந்த காப்பகத்தின் குறிக்கோள்கல் என்ன என்பதை இதன் அமைப்பாளர்களில் ஒருவரான முனைவர் செல்வஜோதி கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறார்;
“ அறிவியல் தொழிழ்நுற்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலும், அனத்துலக அளவில் மேம்பட்டு வரும் கல்வி நிலையொயும் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினர் பயன்பாட்டுக்கு உகந்த தகுந்த கலைச்சொற்களை உருவாக்குதல்.”
“மலாய் மற்றும் ஆங்கில மொழியில் உள்ள தரமான படைப்புகளை தமிழ் மொழியிலும், தமிழ்மொழியில் உள்ள தரமான படைப்புகளை மலாய் மற்றும் ஆங்கில மொழியிகளுக்கு மொழியாக்கம் செய்வது.”
“தமிழ் மொழியை வளப்படுத்த தகுந்த புத்தகங்களை வெளியீடு செய்து அதன் வழி மேல்கல்வி கூடங்களிலும் பள்ளிகளிளும் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருத்தல்.”
“நடைமுறையில் தமிழ்மொழியின் பயன்பாடு தரமாகவும் இலக்கண விதிகளுக்கு ஏற்பவும் அமைவதை மேலும் வலுப்படுத்திதல்.”
இந்த மலேசிய தமிழ்மொழி காப்பகம் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்க தக்கது என்கிறார், தமிழ் அறவாரியத்தின் துணைத்தலைவர் மருத்துவர் செல்வம். அரசாங்கத்தின் அங்கீகாரமும் அதன் ஈடுபாடும் இந்த காப்பகத்தின் செயலாக்கத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்பாடு செய்யவும் பெருதும் உதவும் என்கிறார்.
“நாம் அரசாங்கத்தை பயன்படுத்துவதின் வழி தமிழை மேலும் தற்காக்க இயலும்” என்கிறார்.
இந்த காப்பகத்தின் கௌரவ தலைவராக துணை கல்வியமைச்சர் தீயோ நீ சிங் அவர்களும் துணைத்தைவராக தெய்வீகன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இதன் செயல்குழுவில் சுமார் 24 அங்கத்தினர்கள் இருப்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
தமிழர் அல்லாத ஒருவர் இதற்கு தலமை ஏற்க வேண்டுமா, என்ற வாதமும் எழுந்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இது இயங்குவது விவேகமானது என்ற நிலையில் கல்வி துணை அமைச்சரை ஒரு கௌரவ தலைவராக ஏற்று கொள்வதால் கல்வி அமைச்சு சார்புடைய செயலாக்க வழிமுறையில் நன்மையுண்டு என எதிர்பார்க்கலாம். காப்பகத்தின் நிருவாக செயலவைக்கு தலைவராக தமிழர் நியமிக்கப்படவேண்டும் எனக்கோரலாம்.
“இனி, தமிழில் எளிய கலைச்சொற்கள் , சரியான மொழிபெயர்ப்பு , நிறைவான மொழி பயன்பாட்டை நாடெங்கும் காணலாம் என தமிழர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், இதை வெற்றியடைய செய்வது அனைத்து தமிழ் நெஞ்சங்களின் தலையாய கடமை என்றால் அது மிகையாகாது”, என்கிறார் தியாகு லோகநாதன்.