ஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்

செய்தியாளராக பணிபுரிவதால் பலவிதமான மனிதர்கள், சூழ்நிலைகளை சந்தித்ததுண்டு. பத்திரிகைதுறையில் நுழையும்போது பல கனவுகள். அதில் என்றும் பசுமையாக இருந்தது, வார் ஜர்னலிஸ்ட்; போர் காலங்களில் பத்திரிகையாளராக வேலைசெய்யவேண்டும் என்பது. அந்த கனவு தகர்ந்த தினம் கடந்த ஆண்டு மே 22.

போர்களம் என்றால் ஆயுதம் தரித்த இரண்டு தரப்புகள் மோதிக்கொள்ளும் காட்சிகள்தான் இதுநாள்வரை நினைவில் இருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே 22 அன்று நடந்த போராட்டத்தில் 13 உயிர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகின. அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாதாரண மனிதர்கள் நம் கண் முன்னே சுட்டுவீழ்த்தப்படும் காட்சிகள், இறந்தவர்களின் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, அவர்களின் குடும்பங்களை சந்திப்பது வலிமிகுந்தது என்று புரிந்துகொண்டேன். 

அச்சம் தோய்ந்த முகத்துடன் குழந்தைகள், பெண்கள் ஓடிய காட்சிகள், என் கண் முன்னே ரத்தம் வழிய நின்ற மனிதர்கள், அழுகை குரல்கள், மரண ஓலம் சூழ முள்புதரில் ஒளிந்துகொண்டு நேரலை செய்திகளை வழங்கிய அனுபவம் மறக்கமுடியாதது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதி வழியில் நூறாவது நாள் போராட்டத்தை மக்கள் நடத்துகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி,ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்கிறார்கள். அந்த செய்தியை முகநூலில் நேரலையாக பதிவு செய்யவேண்டும் என்பதற்காக தூத்துக்குடி சென்றேன். 

ஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்

போராட்டத்தில் வீசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு அலை 

கடற்கரைக்கு அருகில் உள்ள பனிமயமாதா கோயிலில் இருந்து தொடங்கிய அந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் இருந்தனர். இதுபோல பெண்கள் பங்கேற்கும் போராட்டம் மிகவும் அரிது. பெண்கள்தான் அங்கு போராட்டத்தின் முன்வரிசைகளில் நின்றார்கள். பலரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என கோஷமிட்டார்கள். 

பதாகைகளை தாங்கியபடி குழந்தைகள் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் வெளியே வந்தார்கள். திருவிழாவுக்கு செல்லும்போது அண்டைவீட்டாரை அழைப்பதுபோல, கிராம மக்கள் ஒவ்வொருவரும், ”நாங்க கிளம்புறோம், வாங்க சீக்கிரம்.” என தாமதித்துக்கொண்டிருந்த வீட்டாரை கிளம்பச்சொல்லி ஆர்வமாய் நடைபோட்டார்கள்.

சுமார் 10 கிலோமீட்டர் நடந்துசென்று ஆட்சியரிடம் முறையிட்டு, ஆலையை மூடவேண்டும் என்ற உறுதியுடன் போராட்டக்காரர்கள் நடந்தார்கள். காவல்துறை அமைத்திருந்த தடுப்புகள் முன் ஒரு சில நிமிடங்கள் கோஷமிட்டார்கள். காவல்துறையினர் அனுமதி மறுத்தபோது, வழியைவிடுங்கள் என பெண்கள் ஒன்றுசேர்ந்து தடுப்புகளை மீறிச்சென்றார்கள்.

அவ்வப்போது நான் போராட்டக்காரர்களை பேட்டி எடுத்து நேரலையில் வெளியிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சிலஇடங்களில் கருப்பு  உடையணிந்த  நபர்கள் ஆங்காங்கே குழுவாக செயல்பட்டார்கள். அதில் ஒருவர், நூறுவது நாள் போராட்டத்தை மட்டும் எடுக்க வருவீர்களா? ஏன் இதுக்கு முன்பு வரவில்லை என்று கேட்டார். 

 ஸ்டெர்லைட் விவகாரத்தில் தொடர்ந்து நாங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளோம் என கூறிவிட்டு வேலையை தொடர்ந்தேன். 

குழந்தைகளுடன் போராட்டத்திற்கு வந்த தாய்மார்கள்

போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் 30 பேர்களில் ஒருவர் என அறிமுகம் செய்துகொண்ட ஹான்ஸ் என்ற நபர் பேட்டியளித்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை ஆட்சியர் அலுவலகத்தைவிட்டு நகரமாட்டோம், போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றார். 

Sterlite

போராட்டக்காரர்கள் பீட்டர் கோயில் தெருவை தாண்டியபோது, ஒரு பெண் என்னை மறித்தார். ரத்த புற்றுநோயால் அவதிப்படும் தனது ஐந்து வயது குழந்தையுடன் போராட்டத்திற்கு வந்திருப்பதாக சொன்னார். ”என் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக போராட்டத்திற்கு அவனையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு புகை, அந்த ஆலையின் கழிவு எங்கள் நீர்,நிலம் என எல்லாவற்றையும் நாசப்படுத்தி, இப்போது எங்கள் கண்முன்னே எங்கள் குழந்தைகளை காவு வாங்குகிறது,” என கண்ணீருடன் பேசினார். வயதான பெண்மணி ஒருவர் தள்ளாடி நடந்தார். கருப்பு கொடியை ஏந்தியபடி கையை முடிந்தமட்டும் உயர்த்தி ”ஒடுக்காதே ஒடுக்காதே, போராட்டத்தை ஒடுக்காதே” என குரலை உயர்த்தினார். 

அவ்வப்போது பிரதமர் மோதிக்கு எதிராகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷங்கள் ஒலித்தன. சட்ட ரீதியாக ஆலையை மூடமுடியுமா, வழக்கு நடக்கும்போது போராட்டம் மூலம் தீர்வு கிடைக்குமா என கேட்டபோது, மக்களுக்காக அரசு இயங்கவேண்டும் என பதில் வந்தது. 

கிராமங்களை கடந்து சாலைக்கு வந்தபோது ஒரு சிலர்  தண்ணீர் குடங்களுடன் காத்திருந்தார்கள். வெயிலில் வந்த போராட்டகாரர்களுக்கு தண்ணீர் வழங்கினார்கள். குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு உணவு கொடுத்தார்கள். நெடுஞ்சாலையில் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் எறும்புகள் போல ஒன்றுகூடி சென்றார்கள். 

 தேவதையாக வந்த திருநங்கை 

ஆட்சியர் அலுவலகம் பகுதியை நெருங்கும் நேரத்தில் கோஷம் அதிகமானது. ஊடக நண்பர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடன் நின்றால் போராட்டக்காரர்கள் அல்லது அரசு தரப்பினர் யாராவது பேசமுன்வந்தால் அவர்களிடம் பேட்டி எடுக்கமுடியும் என்பதால் அங்கு செல்ல முற்பட்டேன். 

ஐந்து நிமிடங்களில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அந்த கணங்களை நினைக்கும்போதே வியர்க்கிறது. 

ஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்

கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. புகைமண்டலமாக அந்த இடம் மாறத்தொடங்கியது. மக்கள் ஓட்டம் எடுத்தார்கள். ஒரு சிலர் சாலையில் இருந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள். தொடர்ந்து எல்லா காட்சிகளையும் பதிவு செய்துகொண்டிருந்த என்னை ஒரு கும்பல் தடுத்தது.

அங்கு வந்த திருநங்கை ஒருவர் எனக்கு ஆதரவாக பேசினார். ”அவுங்க காலையில் இருந்து போராட்ட குழுவோடு இருக்காங்க. அவுங்கள விடுங்க. நீங்கல்லாம் யாரு? எந்த கிராமம்?” என அவர் கேட்டபிறகுதான் அந்த கும்பல் என்னை விடுவித்தது. ஒரு சில நொடிகளில் புகை மண்டலமாக இருந்த இடத்தில், நான் எந்த இடத்தில் நிற்கிறேன் என தெரியாமல் நான் தொடர்ந்து சென்றேன்.

தீடீரென சாலையில் கடல்அலை போல மனிதர்கள் சேர்ந்து ஓட தொடங்கினார்கள். காவல்துறையினரின் சைரன் சத்தம் மேலும் அச்சம் கொள்ளவைத்தது. அறிவிப்பு கொடுக்காமல் கண்ணீர் புகைக்குண்டுகளை காவல்துறையினர் வீசுகிறார்கள் என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினார்கள். அந்த கணங்களை பதிவு செய்யவேண்டும் என எண்ணம் உறுதியாக இருந்தது. முடிந்தவரை என்னை சுற்றியுள்ள நிலையை நேயர்களுக்கு தெரிவித்தேன்.

கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டதால், கண்கள் எரிய தொடங்கின. தோலில் ஒருவித எரிச்சல் உண்டானது. அந்த காற்றை சுவாசிப்பது சிலருக்கு சிரமமாக இருந்தது. பலரும் இரும்பிக்கொண்டு ஓடினார்கள். தப்பிக்க முடியாத சிலர் கண்களை தேய்த்துக்கொண்டு அங்கு உட்கார்ந்துவிட்டார்கள்.  

அறிவிப்பில்லாமல் துப்பாக்கிசூடு? 

ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஒரு தள்ளுவண்டி கடையின் பின்னால் இருந்துகொண்டு காட்சிகளை பதிவுசெய்தேன். புகைமூட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் மங்கலாக தெரிந்தது. குண்டு வீசப்பட்டது வளாகத்திற்கு வெளியில், ஆனால் உட்புறமும் தீ எரிந்து கரும்புகை உயர்ந்து தோன்றியது. 

ஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்

சிறுதூரத்தில் முள்புதர் தெரிந்தது. அங்கு ஒளிந்துகொண்டேன். என் கேமராவால் என்னை சுற்றியுள்ள இடங்களை காட்டும்வண்ணம் வீடியோ எடுத்தேன். குண்டு சத்தங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. எனக்கு அருகில் ஒரு அலறல் சத்தம். 

இரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஒரு நபரை தூக்கிச் சென்றார்கள். அவர் காலில் குண்டுபட்டு ரத்தம் வழிந்த நிலையில், தசை கிழிந்து தொங்கியது, அவர் கதறினார். என்னை அறியாமல் காயம்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள் என நானும் சத்தமிட்டேன். மேலும் மக்கள் ஓடி வந்தார்கள். நான் மறைந்திருந்த முள்புதரை தாண்டி ஓடியவர்களில் சிலர்.. போலீஸ் வருது, ஓடுங்க, ஷூட்டிங் ஆர்டர் கொடுத்துட்டாங்க.. என கத்திக்கொண்டு ஓடினார்கள். 

 வாங்க போராடலாம், குண்டு போட்டு நம்மை கட்டுப்படுத்துகிறார்கள் என ஒரு இளம்பெண் கத்தி பேசிக்கொண்டிருந்தாள். அங்கிருந்த ஒரு சிறு கூட்டம் அவளை கவனித்தது. ஆனால் சாலைக்கு போக யாரும் தயாராக இல்லை. களைத்துப்போன வயதானவர்கள் அங்கிருந்த ஒரு கடையில் படிக்கட்டுகளில் உட்கார்ந்துவிட்டார். இனி காயமடைந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.  

அடுத்தடுத்து குண்டு சத்தங்கள் அங்கிருந்தவர்களை மிரளவைத்தன. பலத்த காயம்பட்ட நபர்கள், தலையில் ரத்தத்துடன்  ஓடிவந்தார்கள். நான் இருந்த சந்தில் இருந்து வெளியே வந்து கூட்டமாக ஓடியவர்களுடன் நானும் ஓடிச் சென்றேன். தொலைவில் ஒரு தனியார் மருத்துவமனை இருந்தது. காயமடைந்தவர்களை அங்கு தூக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். மருத்துவமனை பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. காயமடைந்தவர்களை பார்த்தேன். நேரடியாக என்னால் பார்க்கமுடியாத அளவுக்கு கோரமான காட்சிகளை பார்க்க நேர்ந்தது.

ரத்தவெள்ளத்தில் முத்துநகர்

தலையில் இருந்து இடுப்பு பகுதிவரை ரத்தத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஒருவரின் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை எடுக்க மருத்துவர்கள் முதலுதவி அளித்துக்கொண்டிருந்தார்கள் . ரத்த வாடை எனக்கு மயக்கத்தை தந்தது. மருத்துவமனை மட்டுமே பாதுகாப்பான இடமாக இருந்ததால், அங்கு இருந்தபடி அலுவலகத்திற்கு செய்திகளை அனுப்பினேன். அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி 10 பேர் இறந்துவிட்டார்கள் என தெரியவந்தது. 

ஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்

நூறு நாட்கள்வரை அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது யார்? காவல்துறை ஏன் அறிவிப்பில்லாமல் கண்ணீர் புகைகுண்டை வீசியது, பொதுமக்கள் இத்தனை பேர் மீது துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது என்ற கேள்விகள் எழுந்தன. 

இறந்த நபர்களை பற்றிய தகவல்கள் அலைபேசியில் குவிய தொடங்கின. ஸ்னோலின் என்ற 19 வயது பெண்ணை காவல்துறையினர் அவளது வாயில் சுட்டார்கள் என்ற தகவல் திகைப்பை ஏற்படுத்தியது.

 அன்று இரவு 10 மணிக்கு ஒரு அழைப்பு வந்ததது. உள்ளுவாசி ஒருவர். ஜான்சி என்ற பெண் சுடப்பட்டது குறித்து பேசினார்.. சம்பவம் நடந்தது  தெரியும்..ஆனால்  144 தடைஉத்தரவு காரணமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அந்த பகுதிக்குச் செல்லமுடியாமல் இருந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜான்சியின் குடும்பத்தினரை சந்திக்கவைப்பதாக கூறினார். 11 மணி ஆகியிருந்தது. முழுக்க இருள் சூழ்ந்த பகுதி அது. ஒரு தெருவிளக்கின் கீழ் இரண்டு நபர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். 

இறந்த ஜான்சியின் வீட்டை காட்டிய  அந்த நண்பர், ”இங்க பாருங்க, ஜான்ஸியோட  தலையில சுட்டத்துல  குண்டு அவரோட தலைய துளைச்சிட்டு போயிடுச்சு. அவரோட மண்டைஓடு துண்டு இங்க பாருங்க…” என அந்த நபர் தெரிவித்தார்.

ஜான்சியின் இறப்பை பற்றி செய்தியை எழுதி அலுவலகத்திற்கு அனுப்பிய பிறகு, நான் இருந்த ஹோட்டல் அறையில் மயான அமைதி என்னை சூழ்ந்துகொண்டது. அந்த இரவை கடக்க வெகுநேரமானது. உறக்கமற்ற என் விழிகளில் ஜான்சியின் இரண்டு பெண் குழந்தைகளின் உருவம் நிழலாடியது.

-BBC_Tamil