மும்பை: லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதற்கான காரணம் குறித்து ராஜ்யசபா எம்பியான சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலிலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜக 295 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணி கட்சிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளன.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. வெற்றியை நோக்கி பாஜக செல்லும் நிலையில், அதற்கான காரணம் குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஹஃப்போஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர்,” இந்த தேர்தலில் சாதியைவிட மதத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது. இளம் தலைமுறை வாக்காளர்களின் எண்ணம் மிக முக்கியம். இளம் தேசியவாதிகள் சாதியை பற்றி கவலை கொள்வதில்லை.
இந்த வெற்றிக்கு காரணம் மோடி அலை இல்லை. இது ஹிந்துத்வா அலை. மோடி அரசின் மோசமான பொருளாதார வளர்ச்சியை இந்தியர்கள் மன்னித்துள்ளனர். அதற்கு பதிலாக 5 ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சிக்காக வாக்களித்துள்ளனர்.
மேலும், வங்கதேசத்திலிருந்து ஊடுருபவர்களை கண்டறிவதற்கு மோடி அரசு எடுத்த முயற்சிகளையும் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்று கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஹஃப்போஸ்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பொருளாதார திட்டங்களில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. ஆனால், ஹிந்துத்வாவை வைத்து மோடி வெற்றி பெறுவார் என்று சுப்ரமணியம் சுவாமி கூறி இருந்தது நினைவுகூறத்தக்கது.