மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமா நிராகரிப்பு!

இந்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்திலும் சரிவைச் சந்தித்ததை அடுத்துத் தான் முதல் மந்திரியாகத் தொடர விருப்பம் இல்லை என மம்தா பானர்ஜி தனது கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரது ராஜினாமா கடிதத்தை ஏற்க அவர்கள் மறுத்து விட்டதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. திரிமுணல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலில் சுமார் 34 இடங்களைப் பிடித்திருந்த காங்கிரஸுக்கு இம்முறை ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு திரிமுணால் காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கட்சியின் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய மம்தா பானர்ஜி பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

‘பாஜகவின் இந்த வெற்றி ஏற்றுக் கொள்ள முடியாதது. ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனக் கேட்க மக்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் எனக்குப் பயமில்லை. மத்திய படைகள் எமக்கு எதிராகச் செயற்பட்டு நெருக்கடியை அளித்தது உண்மை. இது தொடர்பில் தேர்தல் ஆணையத்திடம் நாம் அளித்த புகார் குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதை அடுத்து கடந்த 6 மாதங்களில் என்னால் பணியாற்ற முடியாத நிலையைக் கட்சியிடம் கூறினேன். முதலமைச்சராகத் தொடர விருப்பம் இல்லை என்றும் கூறினேன். ஆனால் அவர்கள் என் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர்.

இனி வருங்காலத்தில் மக்கள் துணிவான முடிவெடுத்தால் தான் என்னால் முதல் மந்திரியாகத் தொடர முடியும். எமது வாக்கு வங்கியை அதிகரிக்க நினைக்கின்றோம். இடதுசாரிகளின் பெரும்பாலான ஓட்டு தான் பாஜகவுக்குச் சென்றுள்ளது!’ என்றார்.

மேற்கு வங்கத்தில் இத்தனை காலம் அடையாளமே இல்லாது இருந்த பாஜக இம்முறை கிட்டத்தட்ட 40% வீத வாக்குகள் பெற்றதை அடுத்துத் தான் அடைந்த உணர்வு நிலையை மம்தா பானர்ஜி டுவிட்டரில் கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கவிதை வங்காளம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘நான் ஏற்றுக் கொள்ளவில்லை!’ என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

-4tamilmedia.com