மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும் மதம், அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையை பெற்று கொண்டுள்ளது. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
இந்த நாடுகள் மத்தியிலே இருக்கக்கூடிய பொதுவான பண்புகளை முதலில் கருத்தில் கொள்வது நல்லது.
முதலாவதாக, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தை தம்மகத்தே கொண்டனவாக காண்பித்து கொண்டுள்ளன. பெரும்பான்மை ஜனநாயகம் என்றதன் பெயரில், அந்நாடுகளில் சனத்தொகையில் அதிகம் கொண்ட மதம் அல்லது மொழி ஆட்சியில் அதிகாரம் செலுத்துகின்றது. மேலும் தேசியவாதம் என்பது அதிகாரம் செலுத்தும் மதமும் அது சார்ந்த மொழியையும் முதன்மைப்படுத்தவதாக உள்ளது.
இரண்டாவதாக, அவை அனைத்தும் மதத்தையே அடிப்படையாக வைத்து பெரும்பான்மை அரசியல் நடத்தி வருகின்ற போதிலும் பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தள நிலையில் உள்ள மக்களை, பெரும்பான்மையாக தம்மகத்தே கொண்டுள்ளன. கல்வி அறிவு விகிதம் குறைந்த மக்கட் தொகை அதிகம் காணப்படுகிறது
மூன்றாவதாக, இந்த நாடுகள் அனைத்தும் பெரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளன. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் , சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் மதக்கூறுகளின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது
இத்தகைய நிலைமையினால், சமூகப் பிரிவினைகளை கொண்ட நாடுகளாக இந்த நாடுகள் உள்ளன. சமூகப் பிரிவினைகள் உள்நாட்டு நிர்வாகத்தில் அரசியல் அமைதி இன்மையை உருவாக்குகின்றது அல்லது இலகுவாக சமூக சீர் கேடுகளை உருவாக்க கூடிய நிலை உள்ளது.
மோசமான, அரசியல் சமூக உறுதியற்ற தெற்காசிய நாடுகளை தமது பூகோள அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்றாற்போல், வல்லரசு நாடுகள் உபயோகப்படுத்த முனைகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளை எவ்வாறு தமது முகவர் யுத்தத்துக்கு தகுந்த வகையில் பயன்படுத்துகின்றனவோ, அதேபோல தெற்காசிய நாடுகளையும் தமது பொருளாதார இராணுவ நலன்களுக்கு ஏற்ற வகையில் வல்லரசுகள் அவற்றின் உள்நாட்டு பிரிவினைகளை, தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.
இதனை மேலைத்தேய இராஜதந்திர நகர்வுகளில் internal mechanism என்ற கவர்ச்சி மிக்க சொற் தொடர் கொண்டு உள்ளக பொறி முறையை கையாளும் வகையை குறிப்பிடுகின்றனர். இதில் மிதமான பாதையாயின், எதிர் கட்சிகளை தூண்டி விடுதல், கடினமான பாதையாயின் மதங்களிடையே கலவரங்களை உருவாக்கும் வகையில், முகவர்கள் மூலம் குண்டு தாக்குதல்களை நடத்துதல் என அனைத்தும் அடங்கும்.
இந்த வகையில் தெற்காசிய நாடுகள் அனைத்தும் தமது முன்னேற்றம் என்பதன் பெயரில் சீனாவிடம் கடன் பெற்றுக் கொள்வதிலும், அமெரிக்காவுடன் ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதன் ஊடாகவும், தமது சுதந்திர அரசியலையும் இறையாண்மையையும் பறி கொடுத்தனவாக உள்ளன. இந்த வரிசையில் அடங்கக்கூடிய தெற்காசிய நாடுகளில் முக்கியமானவற்றை இங்கே காணலாம்.
மதம்பிடித்துள்ள இந்தியா
2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததிலிருந்து இந்து அடிப்படைவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் என அழைக்கப்படும், தேசிய தன்எழுச்சி தொண்டர்கள் அமைப்பு (Rashtriya Swamyam Sevak Sangh) தனது சித்தாந்தத்தை வெகு வேகமாக நிலைநிறுத்துவதில் கவனமாக உள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்து அடிப்படைவாதம் அரச நிர்வாகப் பிரிவுகளுக்குள் இரகசிய, அத்துமீறிய ஆக்கிரமிப்பகளை செய்து வருகிண்ற போதிலும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வின் வெற்றி இந்து அடிப்படைவாதத்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது
இது வரை காலமும் குற்றச்செயல்களாக கருதப்பட்ட இதர மதநம்பிக்கைகளை தவறாக தூற்றுதல், மதிப்பளிக்காது விடுதல் போன்ற செயற்பாடுகள், தற்போது ஏற்று கொள்ளத்தக்கதாக அல்லது அரச சேவையாளர்களால் கூட உதாசீனம் செய்யப்படுவதாக உள்ளது.
இத்தகைய இதர மதங்கள் மீதான வெறுப்பு குறிப்பாக, வட இந்திய சமூகங்களால் அதிகம் மேற்கொள்ளப்படுவதாக நியூயோக்கர் என்ற அமெரிக்க சஞ்சிகை கூறுகிறது.
இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம் சமய சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் பெரும் இடையுறுகளை விளைவிப்பதாக உள்ளது. உதாரணமாக இந்து சாதீய அமைப்பிலிருந்து தப்பும் பொருட்டு, பல இந்து தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், மதம் மாறும் நிலை காணப்படுவதாகவும், ஆனால் இந்த நிலைக்கு எதிராக பல மாநில அரசுகள் மதமாற்ற சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவிக்கிறது.
மேலும் பஜ்ஜிரங் தள் எனப்படும் இந்து அதீத வலது சாரி அமைப்பு பல மத கலவரங்களை நடத்தி வருவதாகவும் அத்துடன் பாதிரியார் ஒருவர் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒருவரை மதமாற்றம் செய்தார் என்று அவரை மொட்டை அடித்து கழுதையில் ஏற்றி, நகர் வலம் வந்ததாகவும் அந்த சஞ்சிகை கட்டுரை வரைந்துள்ளது.
கடந்த வருடம் மகாராஷ்டிராவில் சிறு நகரமான குர்கான் எனும் இடத்தில் இந்து தேசியவாத குழுக்கள் பொது இடங்களில் தொழுகைகள் நடத்துவது தடை செய்யப்பட வேண்டும் என்ற மிரட்டியதுடன் அவ்வாறு தொழுகை நடத்த முற்பட்டவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நிலைநாட்டல் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியது.
இது போல் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதீயர்களுக்கும் எதிராக பரவலாக கடுமையான தாக்குதல்கள், வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறித்த செய்திகள், பல மேலைத்தேய பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களில் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளன.
அண்மையில் வெளிவந்த Financial Times Weekend இணைப்பு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில, மோடி அவர்களின் ஆட்சியில் இந்து தேசிய வாதம் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுதல் குறித்து அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டு அதற்கான கற்சிற்பங்களும் தூண்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது மிக விரைவாக பொருத்தி அடுக்கப்பட கூடிய வகையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன் மூலம் அரசியல் வெற்றிக்காக மதசித்தாந்த கருத்துகளை உள்நாட்டில் உபயோகப்படுத்தும் பாஜக அரசாங்கம், வெளியுறவு கொள்கையிலும் கூட சர்வதேசத்தில் அதீத வலதுசாரி தேசியவாத அரசுகளுடனும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த நிலையை தூண்டும் அரசுகளுடனும் அதிக உறவு நிலையையும் பேணும் போக்கையும் காணக்கூடியதாக உள்ளது.
சுவர்க்கத்தில் நடந்தது
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4அம் திகதி இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அதுவே முதன் முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு சென்ற சந்தர்ப்பமாகும். முன்று நாள் பயணத்தின் இறுதியில் இடம்பெற்ற இருதரப்பு தலைவர்களதும் செய்தியாளர் மாநாட்டில் பேசிய இஸ்ரேலியப் பிரதமர், ”இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான திருமணம் சுவர்க்கத்தில் நடந்தது. அதனை இவ்வுலகில் நடைமுறை படுத்துகிறோம்” என்று களிப்புடன் கூறி இருந்தார்.
வலது சாரி தேசியவாதகொள்கை கொண்ட இரு தலைவர்களுக்கும் இடையில் பெருமெடுப்பிலான ஒற்றுமைகள் உள்ளன. இஸ்லாமிய எதிர்ப்புவாத கொள்கை . பொதுவாக பயங்கரவாத எதிர்ப்பு என்ற வார்த்தையை தமது முக்கிய ஆயுதமாக கொண்டு செயற்படக் கூடிய தன்மை ஆகியன இஸ்ரேலிய இந்திய உறவை என்றும் இல்லாத வகையில் நம்பிக்கைக்குரியதாக உருவாக்கி உள்ளது.
கடந்த கால இந்திய அரசாங்கங்கள் பாலஸ்தீனத்தில் ஒரு அரசு நிறுவுவதற்கு தமது ஆதரவுகளை கொடுத்திருந்தனர். இதுகுறித்து பாராளுமன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மோடி அவர்களின் 2017 இஸ்ரேலிய பயணத்தின் போது, அவர் ஜெருசலேமில் இருந்த போதிலும் ஒரு நடுவு நிலைமையை காட்டும் பொருட்டாவது, பலஸ்தீன தலைமையை சந்திக்காது திரும்பியது அவரது இஸ்ரேலிய சார்பு கொள்கையை மிகவும் தெளிவாக காட்டியது.
அதேவேளை இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாட தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், இந்தியாவின் ஆயுத கொள்வனவு ஒப்பந்தம் பிரதமர் மோடி அவர்களால், 4 பில்லியன் டொலர் வரையில் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாஅதிகமாக இறக்குமதி செய்யும் ஆயுத தளவாடங்களில், ரஷ்யாவுக்கு அடுத்தாக தற்பொழுது இஸ்ரேலிய உற்பத்திகள் ஆகும்.
சுவர்க்கத்தில் இடம் பெற்ற திருமணம் என்ற இஸ்ரேலிய பிரதமரின் வார்த்தைகளின் இந்தியாவிற்கான ஆயுத வழங்கல் உடன்படிக்கைகளின் அடிப்படையிலிருந்தே வருகிறது என்பது இப்பொழுது தெளிவாகிறது.
மசகு எண்ணையில் மதம்
இதேபோல பிரதமர் மோடி அவர்களின் சவுதி அரேபியாவுடனான உறவும் மிகவும் நெருக்கமானதாக எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளியுறவு கொள்கை ஈரானுடனான உறவை முறித்து கொள்ளுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
இந்த கட்டுரை எழுதி கொண்டு இருக்கும் பொழுது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜாவீட் சரீப் அவர்கள் புது டில்லியில் பேச்சுவார்த்தைகளுக்காக வந்திருந்தார்
ஏற்கனவே இந்த கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ , ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணையை நிறுத்தி கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மசகு எண்ணை இறக்குமதி நிறுவனமான இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எனப்படும் IOC தனது வருடாந்த இறக்குமதி ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டுக்கு புதுப்பிக்கமாட்டாது என அறிவித்துள்ளது.
அதேவேளை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு பதிலாக இவ்வருடம் ஜூலை மாதம் முதல் ஒரு நாளுக்கு 2மில்லியன் மசகு எண்ணெயை சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு IOC உடன்பட்டிருக்கிறது.
ஆக, இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக செயலாற்றவதற்கு முன் வந்துள்ளது. இந்தியாவின் இந்த நகர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சவுதி இளவரசர், அண்மைய இந்திய பயணத்தின் போது இந்தியாவில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு கைத்தொழிலில் முதன்மை வகிக்கும் Reliance Industries எனும் நிறுவனத்துடன் இணைந்து அந்த கைதொழிலில் 25 சதவீத நிதி முதலீடு செய்வதற்கு முன் வந்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி கைத்தொழிலாக கருதப்படும் இந்தியாவில் உள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு வியாபாரம் குறிப்பாக Reliance Industries அம்பானி சகோதர்களுக்கு சொந்தமானதாகும். பல கோடிகளுக்கு சொந்தக்கார்களாகிய அம்பானிகள் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சகபாடிகள் என இந்திய பத்திரிகைகள் பல தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.
வெறும் வியாபார ஒப்பந்தங்களிலே மதம் எங்கே உள்ளது என்ற கேள்வி எழுமானால் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஈரானை தமது எதிரியாக பார்க்கின்றன. இந்த இரு நாடுகளுமே தமக்கிடையிலான மத பிரிவினைகளை ஒருபுறம் வைத்து விட்டு, சியா இஸ்லாமிய ஈரானை அமெரிக்க துணை கொண்டு தாக்கி விடுவதற்கு முனைகின்றன.
இதற்கு ஏற்றவகையில் பிராந்திய நாடுகளை தமக்கு சார்பாக மாற்றும் பொருட்டு நிதி முதலீடுகள் ஆயுத விற்பனைகள் மட்டுமல்லாது மேலைத்தேயத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச விதி முறைகள் என பல்வேறு காரணிகளையும் சமயோசிதமாக பயன்படுத்தி வருகின்றன.
அதேவேளை தலைமை பிராந்திய நாடுகளின் கீழ் இருக்கக் கூடிய நாடுகளில் தமக்கு சாதகமான யுத்த சூழலை உருவாக்கும் பொருட்டும் சமூக மனமாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் குண்டு வெடிப்புகள் யுத்தக் கப்பல்களின் வரவுகள் என பதற்ற சூழலை குறிப்பாக தெற்காசிய நாடுகளில் ஏற்படுத்துகின்றன.
ஆனால் இந்த நாற்றாண்டின் ஆரம்பத்தில் ஈராக் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட தன் பலனாக, மேலைத்தேயம் சந்தித்த பொருளாதார முடக்கம் அதே காலப்பகுதியில் சீனாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் இராசதந்திர நகர்வுகள் இடம் பெறுகின்றன.
இவ்வார economist சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல “சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டு மூன்று பத்தாண்டுகளின் பின் ஒற்றை மைய உலகு என்னும் நிலை இன்று முடிவு கண்டிருக்கிறது. சீனாவும் அமெரிக்காவும் யார், “நம்பர் வண்“ என்று பெயர் எடுப்பதில் திடகாத்திரமாக பரவலான போட்டியில் உள்ளன.
வர்த்தகத்தின் மூலம் உறவு வலுப்பெறும் என்று இருந்த நிலை மாறி வர்த்தகமே போராகி விட்டது. வல்லரசுப் போட்டிகளை தவிர்க்கும் பொருட்டு புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நிலைமை நிலவுகிற போதிலும் இருதரப்பும் சட்டதிட்டங்களை மீறும் செயற்பாடுகளிலேயே உள்ளன” என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தை முடித்திருக்கின்றது
இருந்த போதிலும் அமெரிக்கா இன்னமும் முழுமையான யுத்தம் ஒன்றிற்கு தயார் நிலையில் இல்லை. இதற்கு பல்வேறு உள்ளக வெளியக காரணிகள் உள்ளன. ஆனால் சந்தர்பங்களுக்காக நிகழ்வுகளை உருவாக்குவதும், நிகழ்வுகளுக்காக சந்தர்ப்பங்களை உருவாக்குவதுமே ஏகாதியத்திய சிந்தனையாளர்களின் அடிப்படை நோக்கமாகும்.
- லண்டனில் இருந்து லோகன் பரமசாமி
- -puthinappalakai.net