சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற வேண்டும்: மோடி பேச்சு

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக மீண்டும் மோடி தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இன்று நடந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேச வந்த பிரதமர் மோடி இந்திய அரசியல் சாசனத்தை வணங்கி விட்டு பேசினார்.

மோடி பேசியதாவது:புதிய இந்தியாவை உருவாக்க இனிதான துவக்கம் இது. தேசிய ஜனநாயக கூட்டணிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. புதிய இந்தியாவை உருவாக்க வழங்கிய தீர்ப்பு இது. நீங்கள் தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கூட்டணி கட்சி எம்.பிகளுக்கும் வாழ்த்துக்கள். முதல்முறையாக தேர்வான எம்.பி.,க்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 

புதிய இந்தியா

இந்த வெற்றி விழாவை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுவாழ் இந்தியர்களும் கொண்டாடுகிறார்கள். அனைவரது ஆலோசனையையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம். புதிய இந்தியாவை உருவாக்க இந்த தீர்ப்பை மக்கள் நமக்கு அளித்துள்ளனர். என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. யார் சேவை செய்வார்கள் என அறிந்து மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

நிறைய பொறுப்புகள்

நிறைய பொறுப்புகள் உள்ளன. அவற்றை ஏற்பதற்காக இங்கு வந்துள்ளோம்.எங்களது சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேர்தலில் வெற்றியை தந்துள்ளனர். சேவையை தொடரும் போது மக்களின் ஆதரவு தானாகவே கிடைக்கும். 2019 தேர்தல் பல தடைகளை உடைத்தெறிந்த தேர்தல். இந்த தேர்தல் உலகத்தையே ஆச்சர்யபட வைத்துள்ளது. இது மனங்களை ஒருங்கிணைத்த தேர்தல். அதிகளவில் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். பெண்களும் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

கூடுதல் வாக்குகள்

2014 லோக்சபா தேர்தலை காட்டிலும் 2019 தேர்தலில் 25 சதவீதம் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளோம். சுதந்திர இந்தியாவில் அதிக பெண் எம்.பி.,க்கள் இந்த லோக்சபாவில்தான் உள்ளனர். பல தேர்தல்களில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளேன். இந்த தேர்தல்தான் எனக்கு ஒரு பாடம். நாடு முழுவது பிரசாரம் மேற்கொள்ளவில்லை. தீர்த்தயாத்திரை மேற்கொண்டேன். பிராந்திய நலன், தேசத்தின் எதிர்பார்ப்பு இரண்டிலும் சமரசம் செய்தது இல்லை. விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை

இரு வழிகளில் பயணம்

கூட்டணியில் இருப்பவர்கள் அதிகார போதைக்கு ஆசைப்படக்கூடாது. உங்கள் வேர்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.தேவையின்றி சர்ச்சை பேச்சுக்கள் பேசக்கூடாது. இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.சிறுபான்மையினரின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். நம்மை நம்பியவர்களால் நாம் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நம்மை நம்பாதவர்களுக்கும் சேர்த்து நாம் இங்கு பணியாற்ற வந்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரு பாதைகளில் பயணிக்க உள்ளது. பிராந்திய விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்வது ஒன்று. மற்றொன்று தேசிய குறிக்கோளை அடைவது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

மக்கள் தேர்வு

முன்னதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசியதாவது:50 கோடி ஏழைகுடும்பங்களுக்கு இலவச கழிப்பறை, மின் வசதி செய்து கொடுத்திருக்கிறோம். நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தி கொடுத்தவர் மோடி. யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு தான் மக்கள் ஆதரவு இருக்கும். யார் தேர்வு செய்தால் நல்லது என அறிந்து மக்கள் மோடியை தேர்வு செய்துள்ளார்கள்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

முன்னதாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில், பா.ஜ., 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. சிவசேனா, சிரோண்மனி அகாலிதள், ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தம் 50 எம்.பி.,க்களை வென்றுள்ளனர்.

புதிதாக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (மே 25) மாலை பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அகாலிதள தலைவர் பிரகாஷ்சிங் பாதல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அ.தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில், புதிய அரசின் திட்டங்கள் மற்றும் அமைச்சரவை குறித்து பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

-dinamalar.com