மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் இடத்தைப் பிடித்த பாஜக – நிலைமை மாறியது எப்படி?

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பெரும்பான்மை வெற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததுள்ளது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் இடதுசாரிகளின் வீழ்ச்சி குறித்து பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது பாஜக. இருப்பினும் மேற்கு வங்கத்தில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டிலும் இதே நிலைமைதான். 37 தொகுதிகளில் மாநில கட்சியான அதிமுக வெற்றிப் பெற்றது. பாஜக காலூன்ற கடினமான மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மேற்குவங்கத்தில் 42 தொகுதிகளில் 18 இடங்களை கைப்பற்றியுள்ளது பாஜக.

கேரளா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுமே கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டன.

கேரளாவில் இடதுசாரிகள் மாறி மாறி வெற்றி தோல்வி என இரண்டும் பெற்றுக் கொண்டு வருகின்றனர். திரிபுராவில் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 25 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தோல்வியை சந்தித்தது. தற்போது மேற்கு வங்கத்திலும் எப்போதும் இல்லாத அளவு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது மார்க்ஸிட் கம்யூனிஸ்ட்.

மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை, 34 ஆண்டுகள் நடைபெற்ற இடதுசாரிகளின் ஆட்சிக்கு 2011ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு கட்டியது.

மேற்கு வங்கம்
Image captionபுத்ததேப் பட்டாச்சார்யா

திரிணாமுல் மற்றும் இடதுசாரிகள்

34 வருடங்களாக மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்தது இடதுசாரி கட்சிகளின் கூட்டணி. ஆனால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக இருந்த புத்ததேப் பட்டாச்சார்யா அவரது சொந்த தொகுதியில் தோல்வியுற்றார். பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது திரிணாமுல் காங்கிரஸ்.

தேர்தலில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற சிங்கூர் மற்றும் நந்திகிராம் பிரச்சனையை கையில் எடுத்தது திரிணாமுல் காங்கிரஸ். சிங்கூர் மற்றும் நந்திகிராமில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் போராட்டங்களில் இறங்கியது.

நில சீர்திருத்தம் கொண்டு வந்த இடதுசாரிகளே, விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தியது, அதனால் வெடித்த வன்முறைகள் என பெரும் எதிர்ப்பை சம்பாதித்த இடதுசாரிகள் ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் தாரைவார்த்தது.

தான் கொண்ட கொள்கையில் இருந்து வேறுபட்டு செயல்பட தொடங்கியதுதான் இடதுசாரிகளின் வீழ்ச்சியின் தொடக்கபுள்ளி.

எதிரியான திரிணாமுல்

2011ஆம் ஆண்டு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸிடம் தோல்வி கண்ட இடதுசாரிகள், அதிலிருந்து தற்போதைய மக்களவைத் தேர்தல் வரை தோல்விகளையே சந்தித்து வருகின்றனர். அதன் வாக்கு சதவீதம் 7%ஆக இன்று குறைந்துள்ளது.

அரசியல் ரீதியாக திரிணாமுல் காங்கிரஸை தங்கள் எதிரியாக நினைத்தனர் இடதுசாரிகள்.

கொள்கை ரீதியாக பாஜகவை அவர்களின் எதிரியாக கருதினர்.

இடதுசாரிகள் திரிணாமுல் காங்கிரஸிடம் கொண்ட பகை பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்டது. 34 ஆண்டு காலம் இடதுசாரி கட்சியால் ஆளப்பட்ட ஒரு மாநிலத்தில் பாஜக 40% வாக்குகளுடன் காலூன்ற காரணமும் அதே இடதுசாரி கட்சிதான் என்பது நிதர்சனம்.

மம்தா

2016ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது மார்க்ஸிட் கம்யூனிஸ்ட். இது பெரும் அரசியல் முரணாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டணியிலும் கூட காங்கிரஸைக் காட்டிலும் குறைவான இடங்களையே பெற்றது மார்க்ஸிட் கம்யூனிஸ்ட். திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மையுடன் அட்சி அமைத்தது.

திரிணாமுல் காங்கிரஸை எதிரியாக கருதும் இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர் அல்லது பாஜகவை ஆதரித்தனர் என்கிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த பத்திரிகையாளர் நிர்மால்யா முகர்ஜி.

“இடதுசாரி கொள்கையில் தீவிர நம்பிக்கை உடையவர்கள் மட்டுமே இடதுசாரிகளுக்கு வாக்களித்தனர் அவர்கள்தான் அக்கட்சி தற்போது பெற்றுள்ள ஏழு சதவீத வாக்காளர்கள்,” என்கிறார் நிர்மால்யா முகர்ஜி.

மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்ற இடதுசாரிகளை போலவே மம்தாவும் ஒரு காரணம் என்கிறார் முகர்ஜி.

மேலும், மம்தா மற்றும் அவரை சுற்றியுள்ள அதிகாரிகள் மீதிருந்த அதிருப்தியிலும் மக்கள் பாஜகவுக்கு வாக்குளித்துள்ளனர் என்று கூறும் அவர் மோதி ஆதரவாளர்கள் என்பதைக் காட்டிலும் மம்தாவுக்கு எதிரானவர்களே பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். என்று தெரிவிக்கிறார்.

பாஜகவுக்கு வாக்களித்தால் அவர்களால் மம்தா மற்றும் அவரின் அதிகாரிகளுக்கு எதிராக போராட முடியும் என்று அவர்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார் முகர்ஜி.

இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு காரணம்

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை பிபிசி தமிழிடம் விளக்கினார் மேற்கு வங்கத்தை சேர்ந்த அரசியல் பார்வையாளர் கார்கா சாட்டர்ஜி.

“இடதுசாரிகள் கட்சி என்றாலே இளம் வயதினர் அதிகம் இல்லாத ஒரு கட்சி என்ற பெயரை பெற்றுவிட்டது. அங்கு கணிசமான அளவு இளம் வயதினர் இல்லை என்பதும் உண்மை”

கார்கா சாட்டர்ஜி
Image captionகார்கா சாட்டர்ஜி

அடுத்தபடியாக “தனக்கு போட்டியான திரிணாமுல் காங்கிரஸை அழிக்க இடதுசாரிகள் தன்னை தானே அழித்துக் கொள்ளும் நிலைக்கு போய்விட்டனர்,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்ற நிலையில் எதிர் கட்சியின் இடத்தை பிடிப்பதற்கும்கூட இடதுசாரிகள் முயலவில்லை என்றும் ஆனால் அந்த இடத்தை தற்போது பாஜக கைப்பற்றியுள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“மேற்கு வங்கத்தில் எதிர்த் தரப்பின் இடத்தை பிடிப்பதில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது என்றே நாம் கூற வேண்டும்,” என்கிறார் கர்கா சாட்டர்ஜி.

அதிகம் இளம் வயதினரை கொண்டிருந்தால் திரிணாமுல்லை அழிப்பதற்கு தன்னை தானே அழித்துக் கொண்டதை அவர்கள் எதிர்த்திருப்பார்கள், எதிர்காலத்திற்கான கனவு கண்டிருப்பார்கள் என்கிறார் கார்கா.

மேலும், இடதுசாரி கட்சிகளில் கிழக்கிலிருந்து வந்த சாதி இந்துக்கள் அதிகம் இருந்த நிலையில், வங்கத்தின் பிரிவினையால் ஏதோ ஒரு விதத்தில் காயமடைந்த அவர்கள், பாஜக தற்போது அங்கு காலூன்றிய பிறகு அவர்களின் இடதுசாரி முகமூடிகள் விலக தொடங்குவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கொல்கத்தா

“2019 மக்கவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் இடதுசாரிகள் சுமார் 22 சதவீத வாக்குகளை இழந்துள்ளனர் இதன்மூலம் இடதுசாரிகளின் வாக்குகள் அனைத்தும் பாஜகவிற்கு சென்றுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்,” என்கிறார் கார்கா.

பாஜக கால் ஊன்றியது எவ்வாறு?

“2016க்கு பிறகு பாஜக பெருவாரியான பணத்தை செலவழித்தது. சமூக ஊடகங்களில் பெருமளவிலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ராம் நவமி போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, ஒவ்வொரு நாளும் வைரலான போலி வீடியோக்கள் என ஒருங்கிணைக்கப்பட்ட பல முயற்சிகள் பாஜகவால் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு அது ஒரு மிகப்பெரிய காரணம்,” என்கிறார் கார்கா சாட்டர்ஜி.

“இம்மாதிரியான ஓர் அரசியலை இதற்கு முன் பார்த்திராத மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் திரிணாமுல் மற்றும் இடதுசாரிகள் ஆகிய இரண்டு கட்சிகளாலும் இதற்கான சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை,” என்கிறார் அவர்.

அமித் ஷா
Image captionஅமித் ஷா

கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் அமித் ஷாவின் தேர்தல் பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் மேற்கு வங்கத்தின் சமூக சீர்த்திருத்தவாதி வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர். அந்த வாக்குப்பதிவில் அனைத்து இடங்களிலும் மம்தாவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது பாஜக பிரித்தாலும் யுக்தியை பயன்படுத்தினால் அதனை எதிர்கொள்ளும் விதமாக வங்க தேசியவாதம் என்ற ஒரு கொள்கை இங்கு எழும் என்று தெளிவாக தெரிகிறது என்கிறார் கார்கா.

என்ன சொல்கிறது கம்யூனிஸ்ட்?

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது என்றும், என்ன நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

பல காரணங்களால் தனது கோட்டையாக கருத்தப்பட்ட ஒரு மாநிலத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் தங்களை மறுசீரமைத்துக்கொண்டால் மட்டுமே வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்பது அரசியல் விமர்சகர்களின் பொதுவான கருத்து.

-BBC_Tamil