இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்…

சென்னை: இன்னும் 20 நாட்களில் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட போகிறது என்று இயற்கை ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த ஆபத்து நம்மை நெருங்கி கொண்டு இருக்கிறது.. தமிழகத்தில் அதிக மக்கள் வசிக்கும்.. தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சென்னை தற்போது பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. சென்னையில் இந்த வருடம் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் தண்ணீர் பஞ்சம் என்றால் 2003-2006 வரை நிலவி வந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை விட, தாது பஞ்சத்தை விட மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவ போகிறது என்று கூறுகிறார்கள்.

சென்னை எப்படி

சென்னையில் ஒருநாள் குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். இது ஏரிகளில் இருந்து தற்போது கொண்டு வரப்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் இந்த தண்ணீர் விநியோகம் நடக்கிறது. ஆனால் ஆனால் 50 கோடி லிட்டர்தான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஏற்கனவே நிலவி வருகிறது

இத்தனை வருடங்களாக சென்னை இந்த 35 கோடி லிட்டர் தண்ணீர் இல்லாமல் பஞ்சத்தில்தான் இருந்துள்ளது. ஆனால் அது சமாளிக்க கூடிய தட்டுப்பாடுதான். இதனால் சென்னையில் கடந்த 8 வருடங்களில் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை. ஆனால் இனி நிலைமை அப்படி இருக்காது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏன் அப்படி

தமிழகத்தில் இந்த வருடம் மிக மோசமான அளவிற்கு மழை பெய்துள்ளது. மே மாதத்திற்கு முன் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. மே மாதத்தில் பெய்ய வேண்டிய கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுக்க 60% மழை குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தமாக 69% மழை குறைந்துள்ளது. ஃபனி புயலும் பெய்ய வேண்டிய மழையை ஏமாற்றி எடுத்து சென்றது.

இதுதான் காரணம்

இதுதான் தற்போது சென்னையின் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணமாகி உள்ளது. சென்னை பொதுவாக பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம், சோழவரம், புழல் ஏரிகளைத்தான் குடிநீருக்கு நம்பி இருக்கிறது. ஆனால் தற்போது மழை பற்றாக்குறை காரணமாக இந்த ஏரிகள் எல்லாம் காலியாகி வருகிறது. விரைவில் எல்லா எரியும் காலியாகி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்

முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரிகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை. அங்கு இருக்கும் தண்ணீரும் இன்னும் இரண்டு வாரத்தில் மொத்தமாக காலியாகிவிடும் என்று கூறுகிறார்கள். அப்படி செம்பரம்பாக்கம் ஏரி காலியானால், அவ்வளவுதான், இன்னும் 20 நாட்களில் சென்னையில் மிக மிக கடுமையாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட போகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

என்ன பிரச்சனை

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் காலியானால், பெரும்பாலான தண்ணீர் லாரி நிறுவனங்கள் தண்ணீர் வழங்குவதை மொத்தமாக நிறுத்தும். கேன் வாட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும். பின் பெரிய அளவில் விலை உயரும். கடைசியில் மொத்தமாக நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்கள்.

நிலத்தடி நீர்

அதே சமயம் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூட நாம் நினைக்க முடியாது. சென்னையில் இதே அளவு தண்ணீர் பஞ்சம் நிலவினால் இன்னும் இரண்டு வருடங்களில் நிலத்தடி நீர் மொத்தமாக காலியாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள். இதனால் இப்போதே தண்ணீர் பஞ்சத்திற்கு உடனடியாக அரசு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வந்தாரை வாழவைக்கும் சென்னையை வாழ வைக்க முடியாது நிலை ஏற்படும்!

tamil.oneindia.com