தேர்தல் முடிவுகள் 2019: புதிய மக்களவை உறுப்பினர்கள் தமிழக உரிமைகளை எவ்வாறு பெற முடியும்?

2019 மக்களவை தேர்தலில் திமுக 37 இடங்களை பெற்றிருந்தாலும், மத்தியில் பாஜக வலிமையுடன் ஆட்சி அமைத்துவிட்டதால், தமிழ்நாட்டிற்கான உரிமைகளை கேட்டுப்பெறுவதில் சிக்கல் நீடிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

மத்தியில் ஒரு கட்சியும், அதற்கு எதிராக உள்ள கட்சி மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களவை தொகுதிகளில் வென்றுவிட்டால், அந்த மாநிலத்தின் நன்மைகள் பாதிப்படையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் கடந்த பாஜக ஆட்சியில், அதிமுகவின் செயல்பாடுகளால் தமிழகத்திற்கு விளைந்த நன்மைகள் குறைவு என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் திமுகவின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கவேண்டும், தமிழகத்திற்கான உரிமைகளை நிலைநாட்டுவதுடன், பலமான எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்படும் என்றும் பேசவேண்டியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்ட உதவியாளராக செயல்பட்ட அனுபவம் பெற்ற ஆய்வளர் ரா.அலமுவிடம் பேசியபோது, ஆளும் கட்சியாக இருப்பதைவிட எதிர்க்கட்சியாக இருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக உழைக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

”தற்போது திமுக மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது. ஆனால் அந்த வெற்றி எந்த பயனையும் தமிழகத்திற்கு அளிக்காது என்று சொல்லமுடியாது. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, மத்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி மற்றும் திட்டங்களை அளிப்பதை சட்டபூர்வமாக நிறுத்தமுடியாது. அதனை தாமதபடுத்தலாம் அல்லது குறைக்கலாம். இந்த சூழல்களில் திமுக பாலமாக செயல்பட்டு தங்களது மாநிலத்தின் பிரச்சனையை விவாதிக்க நேரம் கொடுக்கவேண்டும் என்று கோரலாம்,”என்கிறார்.

கடந்த மக்களவை தேர்தலில் 37 இடங்களைப் பெற்ற அதிமுகவால் தமிழகத்திற்கு நன்மைகள் விளையவில்லை என மக்கள் பதில் சொல்லவிட்டார்கள் என்று கூறும் அலமு, ”அதிமுக உறுப்பினர்கள் பாடல்கள் பாடுவது, தமிழகத்திற்கு எதிரான திட்டங்கள் எதற்கும் வலிமையான எதிர்ப்புகளை பதிவு செய்யாமல் போனதால், ஜி.எஸ்.டி, நீட் போன்ற பிரச்சனைகளில் தமிழகம் பாதிப்புக்கு ஆளானது. தற்போது இந்த பிரச்சனைகளை முழுவதுமாக தீர்க்க முடியாவிட்டாலும், சரிசெய்ய திமுக முயற்சி செய்யலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன,”என்கிறார் அவர்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக இருப்பதால், கேள்வி நேரத்தின் பெரும் பகுதியை பயன்படுத்தில் கொள்ளும் வாய்ப்பை அந்த கட்சி பெற்றுள்ளது என்கிறார் அலமு.

”தமிழகத்தின் பிரச்சனைகளை, உதாரணத்திற்கு தண்ணீர் தட்டுப்பாட்டை தனி விவாதமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை திமுக வைக்கலாம். அதற்கு நிச்சயம் அண்டை மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள். அதேபோல நிலைக்குழுக்களில் (parliament standing committee) இடம்பெறும் உறுப்பினர்கள் முக்கிய விசாரணைகளை நடத்தலாம், அரசின் திட்டங்களை கேள்விக்கு உட்படுத்தலாம்,”என்கிறார் அலமு.

தமிழகத்திற்கு புதிய திட்டங்களை கொண்டுவருவதில் திமுகவுக்கு சிக்கல்கள் நீடிக்கும் என்றாலும், குறைந்தபட்சம் தமிழகத்தின் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களை பலமாக எதிர்க்கும் வாய்ப்பை திமுக பெற்றுள்ளது என்கிறார் பேராசிரியர் ராமஜெயம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகதில் சமூகவிலக்கம் மற்றும் சேர்த்தல் கோட்பாடு ஆய்வு மையத்தில் சமூக பிரச்சனைகள் தொடர்பான ஆய்வுகளை நடத்துபவர் பேராசிரியர் ராமஜெயம்.

ஸ்டாலின்

”தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். மீத்தேன், ஹைட்ரோகார்பன், விவசாயத் துறையில் வறட்சி, தண்ணீர் பிரச்சனை என பல பிரச்சனைகளை தீர்க்கமாக ஆராய்ந்து பேசக்கூடிய உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றத்திற்கு செல்லும் குழுவில் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக தற்போது இருப்பது விவசாயிகளின் பிரச்சனை மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை. இதற்கு திமுக உறுப்பினர்கள் எவ்வாறு தீர்வு காண்பார்கள் என்பதை பாரக்கவேண்டும்.”

”அவர்களின் தொடர் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மற்ற மாநில உறுப்பினர்களிடம் தங்களது மாநில நலனை முன்னிறுத்தும் தன்மையை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்,”என்கிறார்.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நீரை தமிழகத்திற்கு கொண்டுவரவுள்ளதாக நிதின் கட்கரி அறிவித்துள்ளதை குறிப்பிட்ட ராமஜெயம், ”தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் பாஜக அக்கறை காட்டுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆனால் தங்களது அரசியல் அடையாளத்தை நிலைநாட்ட பாஜக காட்டாயம் வேலைகளை செய்யும். அவற்றை திமுக எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்,”என்கிறார் அவர்.

jothimani sennimalai

கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியிடம் பேசினோம். திமுக-காங்கிரஸ் கூட்டணியானது அதிமுக உறுப்பினர்களை போல இல்லாமல், மாநில உரிமைகளுக்கான குரலாக ஒலிக்கும் என உறுதியாக பேசுகிறார் ஜோதிமணி.

”எட்டு வழிச்சாலை, கீழடி, ஸ்டெர்லைட் விவகாரம் என அடுக்கடுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தமிழகத்தை ஒடுக்குகிற போக்கு பாஜக அரசாங்கத்திடம் உள்ளது. இந்த பிரச்சனைகள் நடந்தபோது தமிழகத்தை சேர்ந்த 37 அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த பிரச்சனைகள் குறித்து வாய்திறந்து பேசாத போக்கை அதிமுக உறுப்பினர்கள் கொண்டிருந்தார்கள். அதிமுகவினர் பாஜகவுக்கு அடிபணிந்து சேவகம் செய்யும் நிலையில் இருந்தார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத்தின் தமிழகத்தின் குரலாக மட்டுமல்லாமல், இந்திய மாநிலஅரசுகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கும்,”என்கிறார் ஜோதிமணி.

தமிழகத்தின் புரிதலை, மற்ற மாநிலங்களுக்கும் கொண்டுசேர்க்கும் வாய்ப்பாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தையும் திமுக-காங்கிரஸ் உறுப்பினர்கள் கருதுவார்கள் என்கிறார் ஜோதிமணி.

-BBC_Tamil