டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மோசமான தோல்வியால், அந்த கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் எதிரொலியாக, மேலும் 3 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளையே வென்றது. இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று, மகாராஷ்டிரா காங். தலைவர் அசோக் சவான், ஒடிசா மாநில தலைவர் நிரஞ்சன் பட்நாயக், உ.பி. காங். தலைவர் ராஜ் பாப்பர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைர் சுனில் ஜாகர், தனது ராஜினாமா கடிதத்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்துல்ளார். இவர் குர்தாஸ்பூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சன்னி தியோலிடம் தோல்வியடைந்தவர். கடந்த தேர்தலில் பஞ்சாப்பில் 3 தொகுதிகளை மட்டுமே காங். வென்றது. இம்முறை 8 தொகுதிகளை வென்றது. இருப்பினும், சுனில் ஜாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதேபோல, ஜார்கண்ட், காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், தனது பதவியை ராஜிாமா செய்துள்ளார். அதேபோல அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போராவும் ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளார். இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், சாட்சாத் ராகுல் காந்தியும் கூட தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக டெல்லி தகவல்கள் சொல்கின்றன.