நரேந்திர மோதியின் இமாலய வெற்றிக்கு இந்துத்துவா செல்வாக்கே காரணமா?

ஒற்றை நபர் மீது மக்கள் இந்து சமூகத்தை காப்பாற்ற வந்தவர் போல் நம்பிக்கை வைத்தது இந்திய வரலாற்றில் முன் எப்போதும் நிகழாதது. அது மட்டுமின்றி, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோதி போன்ற ஒற்றை நபர் அரசியல் ரீதியாக இந்துத்துவா செல்வாக்கை பயன்படுத்தி மாபெரும் வெற்றியடைவதும் இதுவே முதல் முறை.

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி காலத்தில் கூட ஒரு நபர் அரசியல் அபரிமித ஆதரவைப் பெறுவது நடக்கவில்லை.  ஏறக்குறைய 50 சதவிகிதம் ஓட்டுக்களை பாஜக வாங்கி இருக்கிறது. அனைத்து சமூகத்திலும் பாஜக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் பாஜகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர அமைப்புகள் ஒரே கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்திய அரசியலில் அவர்களுக்கு கிடைத்த ஒரு எதிர்பாராத வாய்ப்பு இது என்று கருதலாம். இது எப்படி நடந்தது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. 

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அனைத்து விதங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கின்றன. திட்டங்கள் கொள்கைகளை வகுப்பதில் தடுமாற்றம் அடைந்தனர். தேசிய அளவில் ஒருங்கிணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. 

மோதியின் கடந்த 10 ஆண்டுகால பிரசார உத்தி இந்தியாவின் பழைய அமைப்புகளை குற்றம் சாட்டுவது. அதாவது நேரு, காந்தி குடும்பத்தின் ஆட்சி. அது ஊழல் ஆட்சி என்றும் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்பதுமே மோடியின் தாரக மந்திரம்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியிலும் பெரிய மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. பிரியங்கா காந்தியை அரசியலில் கொண்டு வந்ததை தவிர, அந்த கட்சியில் எந்த மாற்றமும் இல்லை. 

நரேந்திர மோதி

மோதியின் பிரசாரமே வாரிசு அரசியலை விமர்சிப்பது தான். வாரிசு அரசியல் என்ற பழமைவாதத்தால் தான் நாடு முன்னேற்றம் காணவில்லை என்று கூறுகிறார். அதற்கேற்ப, காங்கிரஸ் அண்மையில் ஆட்சியை பிடித்த ராஜஸ்தானில் அம்மாநில முதலமைச்சர் அஷோக் கெலோட் மகனுக்கு மக்களவை தேர்தலில் வாய்ப்பு கொடுத்தது. இதேபோல் மத்தியப்பிரதேசத்திலும் முதலமைச்சர் கமல்நாத் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இது மோடியின் முழக்கத்திற்கு பெரிதும் உதவியது.

இந்த வெற்றி எந்த சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று கேட்டால் இது பெரும்பான்மைவாதத்துக்கு கிடைத்த வெற்றியே என்று சொல்லலாம். இந்திய அரசியலின் அச்சு எப்போதும் மைய வாதத்திலேயே இருக்கும் என்று மக்கள் நம்பினர். பாஜக வெற்றிபெறவேண்டும் என்றால் அது காங்கிரஸ் போல ஆகவேண்டும் என்று நகைச்சுவையாக கூறுவார்கள். ஆனால், மையவாதப் பாதை என்பது இனி இல்லை.

பாஜகவிற்கு எதிர்மறை விளம்பரங்கள்

இந்த தேர்தலில் பாஜகவிற்கு எதிர்மறை விளம்பரங்கள் நிறைய கிடைத்தன. உதாரணமாக குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாக்கூரை வேட்பாளரான பாஜக நிறுத்தியது. 2014ல் பாஜக இந்த உத்தியைக் கையாள வில்லை. அப்போது அவர்களின் முழக்கம் பொருளாதார வளர்ச்சி, வாரிசு அரசியலுக்கு எதிராக அமைந்தது.

இது பெரும்பான்மைவாதத்துக்கு கிடைத்த வெற்றி என்பதை மறுக்க முடியாதது. இளம் தலைமுறையினரை கவர காங்கிரஸ் தவறிவிட்டது. குறிப்பாக, ராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு வடஇந்தியாவில் காங்கிரசின் செல்வாக்கு சரிவை கண்டது. வடஇந்தியாவில் உள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் இந்தியில் சரளமாக பேச முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் காங்கிரஸ் இழந்து விட்டது. உத்தரப்பிரதேசத்தில் தலித், இஸ்லாமியர்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டது. இவர்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெற காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பது கேள்வி. இஸ்லாமியர்கள் வாக்குகளை பெற வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ், இஸ்லாமியர்கள் குறித்து ஆர்வம் கொள்ளவில்லை.

இந்துத்துவா

பாஜகவின் தேசியவாதம் தீவிரமானது மட்டுமல்ல ஆணாதிக்கத்தன்மை வாய்ந்ததும்கூட, ஆனால் பிரசாரக் கூட்டங்களில் மோதி பெண்கள் உரிமை பற்றி பேசினார். மானிய விலை சமையல் எரிவாயு திட்டம் கொண்டு வந்ததாக முழக்கமிட்டார். இதுபோன்ற முழக்கங்களை காங்கிரஸ் எடுத்துரைக்கவில்லை. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்கள் இருந்தன. வரவேற்பும் பெற்றன. ஆனால், தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகத்தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர்.

யாருடைய தவறு?

உச்சநீதிமன்றத்துக்கு அரசாங்கம் அழுத்தம் தருவதாக நீங்கள் கூறலாம். ஆனால், இவ்வளவு அதிகாரம் கொண்ட அமைப்பு உள்ளிருந்து உதிர்கிறது என்றால், கல்வி நிறுவனங்களின் சுயநிர்ணய உரிமை அழிக்கப்படுகிறது என்றால், முதலில் யாரை குற்றஞ்சாட்ட வேண்டும்? அந்நிறுவனங்களில் அதிகாரத்தில் உள்ளவர்களைதான் குற்றஞ்சாட்ட வேண்டும்.

உச்சநீதிமன்றம் அரசாங்கத்தோடு ஒத்துப்போகிறது என்று நீங்கள் பொதுமக்களிடம் கூறினால், நாட்டின் மேம்பட்ட பொறுப்புகளில் இருக்கும் நீதிபதிகளே அரசாங்கத்துக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்கின்றனர் என்றால், அதற்கு அரசாங்கத்தை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று மக்கள் கேட்பார்கள்.

இந்திய சமூகம் இன்று சந்திக்கும் ஒரு நெருக்கடி என்னவென்றால், இவ்வாறான உயரடுக்கு பிரிவுகள் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் இழந்திருப்பது. இதனை மோதி மிகவும் தந்திரமாக குறிப்பிடுகிறார்.

இன்று இந்த நிறுவனங்கள் எல்லாம் அழிக்கப்படுகிறது என்றால், அதற்கு அந்தந்த நிறுவனங்கள்தான் பொறுப்பே தவிற மோதியை குற்றஞ்சாட்ட முடியாது.

ஓரிடத்தில் பெரும் அதிகாரம் ஆபத்தானது

ஊடக நடவடிக்கைகளுக்கு யாரை குற்றஞ்சாட்டுவது? அதற்கு மோதி காரணமா? அல்லது அந்தந்த ஊடக உரிமையாளர்கள் காரணமா?

பத்திரிக்கைத்துறை அஞ்சாது நியாயமாக செயல்பட வேண்டும் என்கிறோம். எப்படி நியாயமாகவும், அச்சமின்றியும் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற பெயரில், பழைய மாதிரியே அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது தவறு, அல்லது இது சரி என்று கூறவில்லை.

ஊடகங்கள் சொல்லும் பொய்கள், மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை நாம் ஆராய வேண்டும். மேலும், அந்த பொய்யை வெளிப்படுத்தும் நபருக்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்தையும் பார்க்க வேண்டும்.

பெரும் அதிகாரம் ஒற்றை நபரின் கையில் இருப்பது ஆபத்து என்பது உண்மையே. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

பாஜக ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. அது ஒரு சமூக கட்டமைப்பும் கூட. அவர்களுக்கென ஒரு கலாசார திட்டம் இருக்கிறது. இன்று முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகக் மிகக் குறைவாக இருக்கிறது.

மத அடிப்படைவாதியாக இருப்பதை தவிர்பாரா மோதி?

ராம ஜன்மபூமி இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே, மதக் கொள்கைகளை அவர்கள் வைத்துள்ளனர்.

மோதி அதை நிறுத்துவார் என்றோ அல்லது பின் வாங்குவார் என்றோ தோன்றவில்லை. இந்த தேர்தலில் தரம் மிகவும் குறைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. பத்து வருடங்களுக்கு முன் பிரக்யா தாகூர் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் என்பதை நினைத்து பார்க்க முடியுமா? அவர் வெற்றிபெற்றதுக்கு கொண்டாட்டங்கள் பலமாக நடைபெற்றன. இதைப் பிடித்து மீண்டும் பாட்டிலில் அடைக்கமுடியாது.

இந்த தேர்தலில் பெரும்பான்மைவாதத்தின் ஆபத்து தெளிவாகத் தெரிந்துவிட்டது.

பிரதமர் நரேந்திர மோதி கூறுவது போல் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லாத சமயத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளது. வளர்ச்சி விகிதம் 4 அல்லது 4.5%. வேலையில்லா திண்டாட்டம் இன்னும் அதிக அளவு உள்ளது

விவசாயத் துறையும் நெருக்கடியில் உள்ளது. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் அவருக்கு வாக்களித்த்தை ஆராய்ந்தால் மக்கள் ஒரு வலுவான தலைவரை பெற அவர்கள் விரும்பினர் என்று புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது ஒரு குறிப்பிட்ட நபர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பான்மை மக்களை பாதிக்காத சூழ்நிலைக்கு நாம் வந்துவிட்டோம். அவர்கள் நம்மை யார் என்ன செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

இந்திய ஜனநாயகம் ஒரு நுண்ணிய புள்ளியில் உள்ளது

மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அது ஜனநாயகத்தின் வெற்றி என நாம் சொல்லலாம். ஆனால் அது மனித குலத்தின் வெற்றியல்ல. அரசமைப்பு மதிப்புகளின் வெற்றியல்ல.

எந்த ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமூகத்தை சார்ந்தவர்களும் எந்த ஒரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளாத ஒரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

பாஜகவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

இந்திய அரசியலில் நாம் பாஜகவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் அவர்கள் பொறுமையாக நீண்டகால உத்திகளை உருவாக்குவார்கள். ராம ஜென்மபூமி இயக்க சமயத்திலிருந்து அவர்கள் நீண்டதொரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல்களில் தோல்வியுற்றால் அவர்களின் கவனம் கலாசார நிறுவனங்களின் பக்கம் திரும்பும். அரசியலில் இருந்து தனித்துவிடப்பட்டால் அவர்கள் சமூகப் பணிகளில் ஈடுபட தொடங்குவர். இதில் மறைந்துள்ள கொள்கை என்வென்றால், ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்யும்போது அவர்களின் இலக்கில் இருந்து மாறிவிட்ட்தாக யாரும் சொல்லமாட்டார்கள். தேர்தல் சமயங்களில் உத்திகளை அமைக்க முடியாது.

காங்கிரஸை பார்த்தால் அவர்களின் தேர்தல் பணிகள் கடந்த ஒன்றரை வருடங்களாக சுறுசுறுப்பாகவே இயங்கி வருகின்றன. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை பணத்துக்கு எந்த குறையும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பணக்காரர்கள் ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழ்மையில்தான் உள்ளது என அவர்கள் நகைச்சுவையாக கூட தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவின் ஒவ்வொரு தலைவரும், தொண்டரும் 24 மணி நேரமும் கட்சிக்காக உழைக்கின்றனர். தேர்தலுக்கு உத்திகளும், அமைப்புகளும் தேவை. 2014ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகு அந்த அமைப்பில் ஒரு சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்தை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

நரேந்திர மோதி

வலுவான அரசாங்கத்தில் அரசமைப்புகள் நிறுவனங்கள் குறித்து பேசினால், ராணுவம் போன்ற அமைப்புகள் புனிதமாக கருதப்படுகின்றன. அதில் எந்தவித அரசியல் மறுப்பும் இல்லை.

கடந்த 6-8 மாதங்களாக அந்த அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காகவும், தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொருளாதார சூழ்நிலை மிகவும் பலவீனமாக உள்ளது. வலுவான அரசாங்கம் பிரகாசமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் வருவதில்லை.

பொருளாதார நிலைகள் எப்படி இருந்தாலும் அரசமைப்பு நிறுவனங்கள் இவ்வாறாகவே இருக்க மோதி இந்த வெற்றியை பயன்படுத்தியுள்ளார்.

(பிரபு மேத்தா, அசோகா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். அவர் பிபிசி செய்தியாளர் ரஜ்னீஷ் குமாருடன் மேற்கொண்ட உரையாடலை மையமாக கொண்டு இந்த் கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது).

-BBC_Tamil