டெல்லி: திரிணாமுல் காங்கிரஸின் 3 எம்.எல்.ஏக்கள், 60 கவுன்சிலர்கள் இன்று டெல்லியில் பாஜகவில் ஐக்கியமாகினர்.
இந்து தேசியவாதம் எனும் கொள்கை பேசியது பாஜக. அதன்பின்னர் கட்சிகளை கபளீகரம் செய்து பாஜகவாக உருமாற்றும் கொள்கையை கையில் எடுத்து வெற்றியும் கண்டு வருகிறது.
இந்த வரிசையில் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராயை 2 ஆண்டுகளுக்கு முன் வளைத்தது பாஜக. இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது 40 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தம்முடன் தொடர்பில் இருக்கின்றனர் என பகிரங்கமாக கூறினார் பிரதமர் மோடி.
லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து 18 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. இதன் பின்னர் 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என மிரட்டியது பாஜக.
இந்நிலையில் முகுல் ராயின் மகன் உட்பட 3 திரிணாமுல் எம்,எல்..ஏக்கள் டெல்லி சென்றனர். முகுல் ராய்தான் இவர்களை அழைத்துச் சென்றார். டெல்லியில் இன்று மாலை பாஜகவில் 3 எம்.எல்.ஏ.க்களும் இணைந்தனர். இவர்களுடன் 60 திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்களும் பாஜகவும் இணைந்தனர்.