முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா- டிரம்ப் அறிவிப்பு!

முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை வழங்கியது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றது.

இந்த ஜிஎஸ்பி திட்டத்தில் பெருமளவு பயனடையும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 5.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38 ஆயிரம் கோடி) அளவிலான இந்திய பொருட்களின் ஏற்றுமதி, எவ்வித வரி விதிப்பும் இன்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு ரூ. 130 கோடி அளவிலான செலவு மிச்சம் ஆகிறது.

இந்த ஜிஎஸ்பி திட்டத்தில் இருந்து இந்தியா நீக்கப்பட்டால் ஆபரண கற்கள், ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். இந்திய சந்தையில் அமெரிக்காவை சமமாக நடத்தவும், அணுகவும் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த அந்தஸ்து நீக்கப்படுவதாக டிரம்ப் கடந்த மார்ச் மாதம் கூறினார்.

இதற்கிடையில் டிரம்பின் இந்த முடிவில் எவ்வித மாற்றமும் இருக்காது என வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியானது.

அதன்படி இந்தியா, முன்னுரிமை வர்த்தக நாடு எனும் தகுதியை இழப்பதாகவும், வரும் 5ம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

-athirvu.in