இந்து அமைப்புகள் ‘சுல்தான்’ படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு: தயாரிப்பு நிறுவனம் கண்டனம்

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துவரும் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடந்தபோது அதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு தயாரிப்பு நிறுவனம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் தற்போது நடிகர் கார்த்தியை கதாநாயகனாக வைத்து ‘சுல்தான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றுவந்தது.

திண்டுக்கல் மலைக்கோட்டையில் மூன்றாவது நாளாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கு வந்த இந்து அமைப்புகள் சில, திப்பு சுல்தான் கதையை அங்கு படமாக எடுக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தன. இது திப்பு சுல்தானின் கதையல்ல என படக்குழுவினர் விளக்கமளித்தனர்.

ஆனால், இந்து அமைப்புகள் அதனை ஏற்காததால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பிறகு காவல்துறையினர் அங்கு வந்தபோதும், முழுக் கதையையும் தங்களுக்குக் கூறவேண்டுமெனக்கூறி இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இதற்குப் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ‘சுல்தான்’ படத்தைத் தயாரித்துவரும் ட்ரீம் வாரியர் நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இது வரலாற்றுப் பின்னணியோ, திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல,” எனக் கூறப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான்படத்தின் காப்புரிமைOTHER
Image captionதிப்பு சுல்தான்

மேலும், “சமீப காலமாக விளம்பர நோக்கில் தனி நபர்களும் சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்துவருகிறது. திரைப்படம் எதைக் காண்பிக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய தணிக்கைக் குழு உள்ளது. இதைத் தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் உரிமை அந்தப் படத்தின் படைப்பாளிக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் ஆகும். எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபு, “அன்று படப்பிடிப்பின் கடைசி நாள். இது திப்பு சுல்தான் கதையல்ல என அவர்களிடம் விளக்கினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. சமீப காலமாக சினிமா துறையினர் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இது” என்று கூறினார்.

எதற்காகப் போராட்டம் நடத்தினீர்கள் என இந்து முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சஞ்சீவியிடம் கேட்டபோது, “அவர்கள் புனிதமான மலையில் திப்பு சுல்தான் படத்தை எடுத்தார்கள். ஆகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம்” என்றார்.

ஆனால், அது திப்பு சுல்தான் கதையல்ல என படப்பிடிப்புக் குழுவினர் கூறியது குறித்து கேட்டபோது, “அது புனிதமான மலை. அங்கே படப்பிடிப்புக் குழுவினர் மது அருந்தினார்கள். அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது” என்றார்.

ஆனால், அரசிடம் அனுமதி பெற்றுத்தானே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது என்று கேட்டபோது, “இனிமேல் அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறி அரசை அணுகவிருக்கிறோம்” என்றார் சஞ்சீவி. -BBC_Tamil