ஆர்.சி.ஈ.பி என்று பரவலாக அறியப்பட்ட பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துள்ளது.
இந்திய அரசு தரப்பில் எழுப்பப்பட்ட வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், இந்த ஒப்பந்தத்தில் சேர வேண்டாம் என்று இந்தியா திங்களன்று (4.11.2019) முடிவு செய்தது.
தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் (Asean) அதனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள பிற கூட்டணி நாடுகளுக்கு, (FTA) இடையில் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்தான் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு(RCEP).
ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய பிற நாடுகள் என மொத்தம் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஆர்.சி.ஈ.பி தற்போது இந்தியா விலகியுள்ளத்தைத் தொடர்ந்து 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டமைப்பாக மாறியுள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் பாதி அளவைக் கொண்டிருந்த இந்த 16 நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்கிக்கொண்டால், பிற உறுப்பு நாடுகளின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த கூட்டமைப்பின் கீழுள்ள 16 நாடுகளுடன் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குவதே பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் நோக்கமாகும். இந்த நாடுகள் ஒவ்வொன்றின் தயாரிப்புகளையும், சேவைகளையும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சலுகைகள் உள்ளிட்டவை மூலம் பிராந்தியம் முழுவதும் கிடைப்பதை இது எளிதாக்கும்.
இந்திய விலகியதன் காரணம் என்ன?
நவம்பர் 4, 2019ல், தேசிய அளவிலான 16வது பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் இருந்து இந்தியா விலகி செல்ல முடிவு செய்தது.
இதுகுறித்து RCEP வர்த்தக மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி , ”பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு தனது அடிப்படை நோக்கத்தை மாற்றியுள்ளது, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்பாடுகள் தற்போது முழுமையாக பிரதிபலிக்கவில்லை,” என்று கூறினார்.
மேலும் இதுபோன்ற சூழலில் இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தகப் பிரச்சனைகளையும் ஏற்கனவே நிலுவையில் உள்ள சிக்கல்களையும் முழுமையாக தீர்க்க முடியும் என்ற திருப்திகரமான யோசனையை முன்மொழியவில்லை என்றும் பிரதமர் மோதி தெரிவித்தார்.
இந்தியாவில் எதிர்ப்பு எழுந்தது ஏன்?
வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் வேறு ஆர்.ஈ.சி.பி நாடுகளின் சரக்குகளை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய வணிகர்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கவலை எழுந்தது.
அந்த நாடுகளின் வேளாண்மை மற்றும் பால்பொருட்களை இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் விமர்சித்தன.
இந்திய தொழிற்துறையினர் சீனாவுடன் போட்டியிட முடியாது என்றும், சீனப் பொருட்கள் வெள்ளம்போல இந்திய சந்தையில் புழக்கத்தில் விடப்படும் என்ற அச்சமும் இந்தியாவில் நிலவியது. இந்தியாவின் விவசாயிகளும் உலக அளவில் போட்டியிட முடியாது என ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கூறினர்.
ஆனால், மற்றொரு தரப்பினர், பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால் உலகளவில் மிகப்பெரிய சந்தையின் மூலம் நாம் லாபம் அடைந்திருக்கலாம் என்கின்றனர்.
மேலும் மருந்துகள், பருத்தி நூல் மற்றும் சேவைத் துறை போன்றவை கணிசமான லாபத்தை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
சீனாவுக்கு ஏன் இந்த ஒப்பந்தம் முக்கியம்?
உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்புகளில் ஒன்றான ‘டிரான்ஸ் பசிஃபிக் பார்ட்னர்ஷிப்’ என்பதை 2016இல் அமெரிக்கா உள்ளிட்ட பசிஃபிக் பிராந்திய நாடுகள் கையெழுத்திட்டன. தங்களுக்கு இது சாதகமாக இல்லை என்று அமெரிக்கா பின்னர் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
கையெழுத்திடப்பட்ட பின்னரும் இந்த ஒப்பந்தத்தை உறுப்பு நாடுகள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும், இது உருவான சமயத்தில் சீனா இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
பெய்ஜிங்குடனான வர்த்தகத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை எதிர்கொள்ள சீனாவிற்கு பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பை ஒரு முக்கிய கருவியாக சீனா பயன்படுத்துகிறது.
பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் முக்கிய நாடான சீனா, அமெரிக்கா உடனான வர்த்தக மோதல் நிலவும் இந்த சூழலில், இந்தியா இல்லாமல் 15 நாடுகளுடன் சேர்ந்து இந்த வர்த்தக ஒப்பந்தத்தை கைத்தெழுதிடுவதில் மும்முரமாக இருந்தது.
அமெரிக்கா உடனான வர்த்தகப் போரால் அந்நாட்டுக்கு சீனா ஏற்றுமதி செய்த பொருட்களின் அளவு குறைந்துள்ளதால், சீனா மீண்டும் தனது ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள ஆர்.ஈ.சி.பி நாடுகள் பெரிய சந்தையாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்பீட்டளவில் வலிமையான இந்தியாவை உள்ளடக்கியிருந்தால், அதனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஒரு நன்மை கிடைத்திருக்கும். இதன் காரணமாக சீனாவின் ஆதிக்கம் குறைவாக இருக்கும். ஆனால், இந்தியா விலகியுள்ளதால் அது நிகழவில்லை.