பிரக்யா சிங் தாக்கூர் பதவி நீக்கம்: கோட்சே குறித்த சர்ச்சை கருத்து எதிரொலி

மக்களவையில் புதன்கிழமையன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யாசிங் தாக்கூர், கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதை அடுத்து மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் தான் மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர் நியமிக்கப்பட்டார்.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, ‘நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்’ என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், ‘தேசபக்தரை நீங்கள் உதாரணமாக குறிப்பிடக்கூடாது’ என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவையில் பிரக்யா தாக்கூரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘தீவிரவாதியான கோட்சேவை தேசபக்தர் என்று தீவிரவாதியான பிரக்யா தாக்கூர் கூறுகிறார்’ என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரக்யா தாக்கூரின் பேச்சுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”பாஜக இதுபோன்ற கொள்கை மற்றும் நிலைப்பாடுகளை ஆதரிப்பதில்லை. இந்த கூட்டத்தொடரில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரக்யா கலந்து கொள்ள வேண்டாம் என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று பிடிஐ செய்தி முகமையிடம் நட்டா தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடந்தபோது, போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்கூர், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது