ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெற்றது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து விவாதிக்க அனுமதி அளிப்பதாக கூறினார்.
அதே போல் மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர்கள், இது போன்ற சம்பவத்தை எந்த மாநில அரசாங்கமும் விரும்பமாட்டார்கள். சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டும் இந்த சிக்கலை தீர்க்க முடியாது.
இத்தகைய குற்ற செயல்களை ஒழிக்க, அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவை உள்ளது. அவசரகால அடிப்படையில் அனைத்து அமைப்புகள், நீதித்துறை, சட்டமன்ற, நிர்வாக மற்றும் பிற அமைப்புகள் ஒன்றிணைந்து சமூக சீர்திருத்தத்தை அமைக்க வேண்டும், என அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டனர்.
இதற்கு வெங்கையா நாயுடு, குற்றவாளிகள் கருணைக்கு தகுதியற்றவர்கள். இது சமூகத்திற்கு அவமானமாகும். இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு புதிய மசோதா தேவையில்லை, அரசியல் ரீதியான நடவடிக்கையே போதுமானது, என்றார்.