மோடி- அமித் ஷா கருத்து வேறுபாடு?

புதுடில்லி: டில்லி அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக அலசப்படும் ஒரு விஷயம்-, ‘மோடிக்கும், அமித் ஷாவிற்கும் இடையே உறவு சரியில்லையாமே…’ என்பது தான். குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில், தொடரும் போராட்டங்களும், இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியான முறையில் அணுகவில்லை எனவும், இதனால் தான், மோடி – அமித் ஷா இடையே புகைச்சல் எனவும், அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

குடியுரிமை திருத்த சட்டம், முழுக்க முழுக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால் கையாளப்பட்டது. பார்லிமென்டில் நடந்த விவாதத்திலும், மீடியாக்களுக்கும், இந்த விவகாரத்தில் அமித் ஷா தான் பதில் அளித்தார். விவாதத்தில் பங்கேற்று பதில் சொன்னார்.’எனவே, இந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டால், மொத்த பழியும் அமித் ஷா மீது தான் விழுமே தவிர, மோடி மீதல்ல’ என, ஒரு சீனியர், பா.ஜ., தலைவர் கூறினார்.ஆனால், இந்த சீனியர் தலைவரின் கருத்தை, மற்ற தலைவர்கள் மறுக்கின்றனர்.

மோடியும், அமித் ஷாவும் எந்த அளவிற்கு நெருக்கம் என்பது, அவர்களோடு அதிகமாக பழகியவர்களுக்குத் தான் தெரியும். மேலும், இந்த சட்டம் குறித்து, பிரதமர் மோடி அடிக்கடி விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு, எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை முறியடிக்க, பல திட்டங்களை தயாரித்து கொடுத்ததே பிரதமர் தான் என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள்.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும், பல போராட்டங்கள் வெடித்தன.

ஆனால், இப்போது அனைத்தும் அமைதியாகிவிட்டது. அதே போல, குடியுரிமை சட்ட விவகாரத்திலும், விரைவில் அமைதி ஏற்படும் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். ‘மோடி- – அமித் ஷா உறவு சரியில்லை’ என, எதிர்க்கட்சியினர் கிளப்பி விட்டதை, மீடியாவும் சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கட்டும்; ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றனர், இவர்கள்