லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி, 336 தொகுதிகளில் வென்று, ஆட்சியை பிடித்தது. இதில், பா.ஜ., மட்டும், 282 தொகுதிகளில் வென்று, 30 ஆண்டுகளுக்கு பின், லோக்சபாவில் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சி என பெயர் பெற்றது.
முந்தைய ஐந்து ஆண்டு ஆட்சியில், பிரதமர் மோடி மீதும், மத்திய அரசு மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. எனினும், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி, 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. பா.ஜ., மட்டும், 302 தொகுதிகளில் வென்று, சாதனை படைத்தது. இரண்டாவது முறையாக, ஆட்சி பொறுப்பேற்று, ஏழு மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 2020ம் ஆண்டில், மோடி அரசுக்கு மாபெரும் சவால்கள் எதிர்நோக்கியுள்ளன. புதிய ஆண்டில், அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து துறைகளிலும், மத்திய அரசுக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
அரசியல்
இந்த ஆண்டு, இரண்டு மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதலாவதாக, தலைநகர் டில்லியில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த, 2015ல் நடந்த தேர்தலில், டில்லியில் மிக மோசமான தோல்வியை, பா.ஜ., சந்தித்தது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், 67ல் வென்று சாதனை படைத்தது. பா.ஜ., மூன்றில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல், படுதோல்விஅடைந்தது.ஆனால், 2018ல் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில், மொத்தம் உள்ள, ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதை, பா.ஜ., கவுரவமாக கருதுகிறது.
மேலும், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில், எதிர்பார்த்த வெற்றியை, பா.ஜ., பெறவில்லை; ஜார்க்கண்டில், ஆட்சியை இழந்து விட்டது. இந்த சரிவுக்கு, ஆறுதல் தரும் வகையில், டில்லியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், பா.ஜ., உள்ளது. இதன்பின், இந்த ஆண்டு, அக்டோபர், நவம்பரில், பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலில், பீஹாரில் மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 39ல், பா.ஜ., – ஐக்கிய ஜனதாதளம் – லோக் ஜனசக்தி கூட்டணி வெற்றி பெற்றது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியை விட, தே.ஜ., கூட்டணி வலுவாகவே உள்ளது.
சவால்
எனினும், பா.ஜ., – நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் இடையிலான உறவு, சிறப்பாக இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கருதப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, இரு தரப்பிலும் இப்போதே உரசல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வை விட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில், ஐக்கிய ஜனதாதளம் உறுதியாக உள்ளது. அதனால், பீஹாரில், கூட்டணியையும், ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வது, பா.ஜ.,வுக்கு முன் உள்ள பெரும் சவால்.
அடுத்த ஆண்டு, மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது. நான்கு மாநிலங்களிலும் வலுவான கூட்டணி அமைப்பது தான், பா.ஜ., முன் உள்ள அடுத்த சவால். அதற்கான பணிகளை, இந்த ஆண்டே துவக்க வேண்டிய நிலையில் உள்ளது. பா.ஜ.,வின் புதிய தலைவராக, ஜே.பி.நட்டா விரைவில் பொறுப்பேற்க உள்ளார். அமித் ஷா போல், நட்டா சிறப்பாக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
போராட்டங்கள்
இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பல போராட்டங்களை, பா.ஜ., எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த இரண்டு விவகாரங்களும், மத்திய அரசுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவை தந்துள்ளதா; அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதா என்பது, விரைவில் தெரிந்து விடும். எனினும், போராட்டங்களை கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தும் முக்கியமான பணி, மத்திய அரசுக்கு உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தான், மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை, ஐந்து ஆண்டுகளில், 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த இலக்கை எட்டுவது, மோடி அரசுக்கு, ஹிமாலய சவால் தான். ரிசர்வ் வங்கி, 2019 – 20ம் ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாகத் தான் இருக்கும் என, தெரிவித்துள்ளது.
7.2 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஏப்ரலில் மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் தொழில் துறை உற்பத்தியும் குறைந்துள்ளது; உள்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடும் குறைந்துள்ளது. அதை அதிகப்படுத்த வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்து உள்ளது.
வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான், இந்த ஆண்டின் மிகப் பெரிய சவாலாக மோடி அரசுக்கு இருக்கும். அதேபோல், இந்தியாவின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 23.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் அதிகரித்து வரும், சுய பாதுகாப்பு கொள்கைகளால், இந்த இலக்கை எட்டுவதில், பல சவால்கள் தலை துாக்கியுள்ளன.
காஷ்மீர் விவகாரம்
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் அங்கு அமைதி நிலவுகிறது. அங்கு இயல்பான வாழ்க்கையை ஏற்படுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள், இந்த ஆண்டின் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும். அண்டை நாடுகளுடனான உறவுகளும் இந்தியாவுடன் சிறப்பாக இல்லை. வங்கதேசத்துடனான உறவு, குழப்பமான நிலையில் உள்ளது.
பாளத்துடனான உறவிலும், விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு பயண வரி விதிக்க, பூடான் முடிவு செய்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின், பாகிஸ்தானுடனான உறவு மிகவும் மோசம் அடைந்துள்ளது. இப்படி அனைத்து துறைகளிலும், பல சவால்களை மோடி அரசு எதிர்கொண்டுள்ளது. இவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு, 2021ல், பிரதமர் மோடி நம்பிக்கையுடன் காலடி வைப்பாரா என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.
73 ராஜ்யசபா பதவிகளுக்கு இந்தாண்டில் தேர்தல்
ராஜ்யசபாவில் மொத்தம், 250 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ., வுக்கு, 83 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு, 46 உறுப்பினர்களும் உள்ளனர். பல மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், அந்த கட் சிக்கு ராஜ்யசபாவில் எளிதாக பெரும் பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் நடந்த ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., தோல்வி அடைந்ததால், பெரும்பான்மைக்கு தேவையான சீட்களை பெறுவதில் மீண்டும் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில், சபையில் நான்கு பதவிகளுக்கான இடங்கள் சமீபத்தில் காலியாகி உள்ளன. மேலும், 69 பதவியிடங்கள், அடுத்த சில மாதங்களில் முடிவடையவுள்ளன.
பதவிக்காலம் முடிவடையவுள்ள உறுப்பினர்களில், 18 பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள்; 17 பேர், காங்கிரசைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், பீஹார் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலங்கள், அதிக அளவில் முடிவடையவுள்ளன. இந்த இடங்களுக்கு, அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு கணிசமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, ராஜ்யசபா வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை
பல்வேறு துறைகளின் முன் நிற்கும் சவால்கள் குறித்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளார். இந்த கூட்டங்களில், ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள திட்டங்கள், செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி, பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். மேலும், திட்ட பணிகளை விரைவில் முடிப்பது பற்றியும், அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியுஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது