ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு: ராணுவ தளபதிக்கு அரசு ஆதரவு

புதுடில்லி : ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த ராணுவ தளபதியின் கருத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் நிருபர்களை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறுகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க உத்தரவு கிடைத்தால், ராணுவம் உடனடியாக செயலில் இறங்கும். இது பற்றி பார்லிமென்ட் தான் முடிவு எடுக்க வேண்டும். பார்லிமென்ட் விரும்பினால், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிற்கு சொந்தமாக்குவோம் எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டுவிட்டரில், புதிய ராணுவ தளபதியே.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான தீர்மானம் 1994 ம் ஆண்டு பார்லி.,யில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசு சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளதுடன், வழிகாட்டுதலும் உள்ளது. ஒருவேளை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க விரும்பினால் தலைமை பாதுகாப்பு அதிகாரி, பிரதமர் அலுவலகம் ஆகியோருடன் கலந்து பேச வேண்டும். குறைவாக பேசி, அதிகமாக பணியாற்றுங்கள் என பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறுகையில், காஷ்மீரை மீட்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை. ராணுவ தளபதியின் கருத்து தவறு கிடையாது. அவரது கருத்து குறித்து மத்திய அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.