முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக்கோலங்களிட்டு, மஞ்சள், கரும்பு, இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அவ்வரிசி பொங்கும்போது, “பொங்கலோ, பொங்கல்” என்று மகிழ்ச்சியாக ஒலி எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

உலகில் உன்னதமான தொழிலான உழவுத்தொழிலை மேம்படுத்திடவும், விவசாய பெருமக்களின் வாழ்வு சிறக்கவும், நுண்ணீர்ப் பாசனத்திற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கும் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை திட்டம், சிறு குறு விவசாயிகளை ஊக்குவித்து கூட்டாக சாகுபடிப்பணியினை மேற்கொள்ள “கூட்டு பண்ணைய திட்டம்”, அதிகரித்து வரும் பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம், தகவல் தொழில் நுட்பம் மூலம் விவசாய பெருமக்களுக்கு வேளாண் தகவல்களை கொண்டு சேர்க்கும் “உழவன்”கைபேசி செயலி, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக விவசாயிகளுக்கு தரமான சான்றுபெற்ற விதைகள் வழங்குதல்,

தமிழ்நாட்டில் விளையும் பழங்கள், காய்கறிகள் ஆகிய விளைபொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்து, மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக வருமானம் பெறும் வகையில் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம், மண் மாதிரிகள் ஆய்வு செய்து, மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள் இடுவதற்காக மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்குதல், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன், 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த இனிய நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.