திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளியில் போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி ரத்தன்லால் தெரிவித்துள்ளார்.
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில், அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்ய தகுதி பெற்றவர்களுக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியராக 425 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியராக 7 பேரும் நியமனம் செய்யப்பட்டனர்.
பின்னர், தகுதி பெற்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்வி சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது, 11 பேரின் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், 10 பேர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் வந்தவர்கள் ஆவர்.
இதுகுறித்து மாநில கல்வித்துறை மந்திரி ரத்தன்லால் கூறியபோது, “போலி சான்றிதழ்கள் வைத்து இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அரசு வேலைக்கு சேர்பவர்களை ஒளிவுமறைவு இல்லாமல் தேர்வு செய்ய தீர்மானித்து இருக்கிறோம்” என்றார்.
maalaimalar