புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில், தலா, ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மற்ற பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீதுக்கு, பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்த வழக்கில், பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளதை நாங்கள் அறிவோம். இது, பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நாடுகள் பாகிஸ்தானுக்கு தந்த அழுத்தத்தின் முடிவுகளில் ஒரு பகுதியாகும். எப்.ஏ.டி.எப். எனப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஹபீசுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இதனால், இந்த தீர்ப்பு மீது எடுக்கப்படும் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தனது மண்ணில் செயல்படும், மற்ற பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள், மும்பை மற்றும்பதன்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
dinamalar