டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

குஜராத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதி ஒன்று இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பார்வையில் படாமல் இருக்க, அதை மறைத்து சுவர் எழுப்பப்பட்டு வருவது விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி இந்தியாவுக்கு வரவிருப்பதைத் தொடர்ந்து அவர்கள் வரவேற்பு பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

அவர்களின் இரண்டு நாள் சுற்று பயணத்தில் அவர்கள் டெல்லிக்கும் அகமதாபாத்துக்கும் வருகை தர உள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த “ஹௌடி மோதி” நிகழ்ச்சிக்கு நடந்த ஏற்பாடுகளைப் போல அகமதாபாத்தில் “கேம் ச்சோ டிரம்ப்” என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குஜராதி மொழியில் “கேம் ச்சோ” என்றால் “எப்படி இருக்கிறீர்கள்?” என்று பொருள்.

இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய மக்களிடம் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. இந்த ஏற்பாடுகளில் ஒன்றாக அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சாபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் இருக்கும் குடிசைப்பகுதிகளை மறைக்க சுவர் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இதை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

குடிசைகளை மறைக்க எழுப்பும் சுவர்

உள்ளூர் ஊடகங்களில் கடந்த வியாழக்கிழமை இது குறித்த அறிக்கை வெளிவந்தது. பிரதான சாலையின் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளை மறைக்க ஆறிலிருந்து ஏழு அடி உயரம் வரை சுவர் ஒன்று எழுப்ப்ப்பட்டு வருகிறது. இதன் நீளம் சுமார் அரை கிலோமீட்டர் இருக்கும்.

அகமதாபாத்தில் இந்திரா மேம்பாலத்தின் அருகே இருக்கும் சரணியவாஸ் என்னும் குடிசைப்பகுதி அமெரிக்க அதிபர் வரவிருக்கும் பாதையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2500 பேர் வசிப்பார்கள்,” என்று பிபிசி செய்தியாளர் தேஜஸ் வைத்ய தெரிவிக்கிறார்.

குடிசைப்பகுதிகளை அரசு மறைக்கப்பார்க்கிறது. குடிசைப் பகுதிகளை மறைக்க வேண்டும் என்றால் எங்களுக்கு நல்ல வீடு கட்டித் தர வேண்டும். அதை விடுத்து ஏழ்மையை மறைக்கப்பார்க்கிறார்கள் என்று குடிசைப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர்.

குடிசை வாசிகளில் ஒருவரான கமலாபேன், “இரண்டு மூன்று நாட்களாக இந்த சுவர் எழுப்பும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதனால் எங்கள் குடிசைப்பகுதி பெரிதும் பாதிக்கப்படும். காற்று வராது தண்ணீர் வராது. இங்கே சாக்கடை வசதியும் இல்லை. மின்சாரமுமில்லை. இருட்டில் வாழவேண்டியுள்ளது. செல்வதற்கு சின்ன பாதைகள்தான் இருக்கும். மழைக்காலங்களில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கும்,” என கூறியுள்ளார்.

திரைச்சீலைகளால் மறைக்கப்படும் பகுதி

அந்த பகுதியில் வசிக்காத வேறு ஒரு பெண், இந்த சுவர் எழுப்பப்படவில்லை என்றால் இங்கே வசிப்பவர்களின் கஷ்டம் அமெரிக்க அதிபருக்கு தெரிந்துவிடும் என்று கூறினார்.

எப்போதும் யாராவது முக்கிய நபர்கள் வந்தால் இப்பகுதியை ஒரு பெரிய துணி ஒன்றால் மறைத்து விடுவார்கள். ஆனால் இப்போது சுவர் எழுப்பி இந்த பகுதியை முழுவதுமாக மறைக்க வழி செய்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

மற்றொருவர் கூறுகையில், இங்கே சுவர் எழுப்புவதன் மூலமாக அந்த பகுதிக்கான பாதையை அடைப்பதாக அந்த மக்கள் கூறுகின்றனர். சாதரணமாகவே அந்த பகுதிக்கு செல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் தலைவர்கள் வந்து வாக்கு சேகரிப்பார்கள். இங்கே கழிப்பிட வசதி, மின்சார வசதி, தண்ணீர் வசதி என எதுவும் இருக்காது என கூறியுள்ளார்.

80 வயதுடைய ஒரு மூதாட்டி கூறும்போது, எங்களுடைய இன்னல்களை துணியைக் கொண்டும் சுவர் எழுப்பியும் மறைப்பதைக் காட்டிலும் அரசு எங்களுக்கு அடிப்படை வசதிகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

சிறப்பாக நடக்கும் ஏற்பாடுகள்

கடந்த ஆண்டு ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் டிரம்பும் மோதியும் இணைந்து உரையாற்றினர், அகமதாபாத்தில் நடக்க இருக்கும் நிகழ்வும் அதே போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைப்படி அகமதாபாத் நகரில் மோடேரா பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா நடைபெறும். இதில் பிசிசிஐயின் தலைவர் சௌரவ் கங்குலியும் கலந்து கொள்ள உள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுபடி, இந்த மைதானம் 1.10 லட்சம் பேர் அமரும் வசதியுடையதாகும். இது ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தைவிட பெரியது என பிடிஐ செய்தி கூறுகிறது.

இந்த மைதானத்தின் திறப்பு விழாவின்போது சுமார் 1 லட்சம் பேர் திரண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்கான பார்க்கிங் வசதிகளை செய்யக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அகமதாபாத்தில் டிரம்ப் சாலை ஊர்வலம் ஒன்றையும் மேற்கொள்ள உள்ளார். பின் காந்தி தங்கிய இடமான சாபர்மதி ஆசிரமத்துக்கு அவர் செல்ல உள்ளார்.

இதனால் அகமதாபாத் மாநகராட்சி பல்வேறு வசதிகளை தயார் செய்து கொண்டுள்ளது.

சமூக வலைதளத்தில் பதிவு

அமெரிக்க அதிபர் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து சாபர்மதி ஆசிரமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் சாலையில் ஊர்வலம் செல்ல உள்ளார். இதனால் சாலை நன்றாக அலங்கரித்து காணப்படுகிறது. மேலும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்து காணொளியாகவும் புகைப்படமாகவும் #kemchchoTrump என்னும் ஹேஷ்டேக்குகள் கொண்டு சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பிபிசி செய்தியாளர் தேஜஸ் வைத்ய, சாபர்மதி ஆசிரமத்திலிருந்து மோடேரா மைதானம் வரை 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தவிர தீயணைப்பு வீரர்களும் அங்கே உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் டிரம்ப் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பிலிருந்து ஆயுதம் கொண்ட பாதுகாப்பு வீரர்கள் மோடேரா மைதானத்தில் காவலில் ஈடுபட உள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் மோடேரா மைதானத்தை சுற்றியுள்ள 16 பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.

நகரில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மைதானத்தின் ஏற்பாடுகளில் பங்கேற்க அழைப்புகள் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

டிரம்புக்கு ஏன் இது முக்கிய சுற்றுப்பயணம்

அமெரிக்காவில் இப்போது வரவிருக்கும் அதிபர் தேர்தலை பார்க்கும் போது டிரம்புக்கு இது முக்கிய பயணமாக கருதப்படுகிறது.
இந்த இந்திய பயணம் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு மிக முக்கியமானதாகும். அமெரிக்காவில் குஜராத்திலிருந்து சென்றவர்களே அதிகம் இருக்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சில ஊடகங்களின் அறிக்கைப்படி கேம் ச்சோ டிரம்ப் நிகழ்வுக்காக சில அமெரிக்காவிலிருந்து குஜராத் சென்ற சிலரை அழைத்துள்ளனர்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்த மோதி

அமெரிக்க அதிபரும் அவர் மனைவியும் இந்த மாதம் இந்தியாவுக்கு வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்களுக்கு நினைவிருக்கும்படியான ஆடம்பர வரவேற்பு அளிக்க உள்ளதாக ட்விட்டரில் பதிட்டுள்ளார் மோதி.

மேலும் இன்னொரு பதிவில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான நல்ல உறவு இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் நன்மை பயக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த வருகை இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் என இரு நாட்டு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
bbc.com/tamil