மக்கள் அமைதிகாக்க வேண்டும்; டில்லி எல்லையை மூட வேண்டும்: கெஜ்ரிவால்

புது டில்லி: டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, சிறப்புப் பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ.,) அதிகாரிகளுடன் வடகிழக்கு டெல்லியில், 35 துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:

டில்லியின் சில பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். நமது நகரத்தில் அமைதியை மீட்டெடுக்க நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். வன்முறையைத் தவிர்க்குமாறு அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.டில்லியின் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் வன்முறையில் ஈடுபடும் மக்கள் வெளியில் இருந்து வருவதாகக் கூறியுள்ளனர். எல்லைகளை முத்திரையிட வேண்டும். மீறி நுழைய முயலும் போராட்டக்காரர்களை தடுக்கவும் கைது செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar