மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்: மசோதா நிறைவேறியது

சிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்திய வங்காளதேச மாணவி இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

கொல்கத்தா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் முதலே போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் பங்கேற்று சிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், மேற்கு வங்காள மாநிலம் பிர்ஹாம் மாவட்டம் சந்தினிகேடன் பகுதியில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிஏஏ-க்கு எதிராக மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

அந்த போராட்டத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வங்காளதேச நாட்டின் குஷ்டியா மாவட்டத்தை சேர்ந்த அப்சரா அனிகா மீம் என்ற இளம்பெண்ணும் பங்கேற்றார்.

தான் பங்கேற்ற போராட்டத்தின் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது.

வங்காளதேச நாட்டை சேர்ந்த மாணவி அப்சரா அனிகா மீம் விசா விதிகளை மீறி இந்தியாவின் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடிய விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், பிப்ரவரி 14-ம் தேதியை குறிப்பாக கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள நோட்டீசில் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக வங்காளதேச மாணவி அப்சரா நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களில் மாணவி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

maalaimalar