கோல்கட்டா: டில்லி வன்முறை, திட்டமிட்ட இனப்படுகொலை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் நேற்று (மார்ச் 1) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக நடந்த பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதில், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ., பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், இதனை மம்தாவால் தடுக்க முடியாது எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் சாணக்கியன் என்றழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் பாண்டேயின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு இப்போதே ‘பங்ளார் கோர்போ மம்தா’ (மேற்குவங்கத்தின் பெருமை மம்தா) என்னும் பிரசாரத்தை மம்தா தொடங்கினார்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று மம்தா பேசியதாவது: டில்லி வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இதற்காக பாஜ., இப்போது வரையில் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் வெட்கமில்லாமல் மேற்குவங்கத்தை கைப்பற்றப்போவதாக பேசுகின்றனர். இந்த சர்வாதிகார அரசாங்கத்தை நாம் தூக்கி எறிவோம் என உறுதிமொழி எடுப்போம். நேற்று அமித்ஷா பங்கேற்ற பேரணியில் ‘கோலி மாரோ’ (சுட்டுத்தள்ளுங்கள்) என்று கோஷம் எழுப்பியுள்ளனர். இது சட்டத்திற்கு விரோதமானது. அவ்வாறு கோஷம் எழுப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு மம்தா பேசினார்.
dinamalar