மிரட்டலான தோற்றத்தில் ரெஜினா – வைரலாகும் சூர்ப்பனகை பர்ஸ்ட் லுக்

கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா தன்னை முதன்மைபடுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். திரிஷா, தமன்னா, சமந்தா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறார்கள்.

இந்த வரிசையில் ரெஜினாவும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு சூர்ப்பனகை என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். சரித்திர காலத்து கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். அதில் ரெஜினாவின் தோற்றம் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். பழங்காலத்தில் தவறு செய்பவர்களை கழுவேற்றி தண்டிக்கும் பழக்கம் இருந்தது. அந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

மனதில் காதல் வைத்துள்ள வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

maalaimalar