நாளை (மார்ச்-05) விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி.,- எப் 10

சென்னை : பூமியை கண்காணிக்கும், ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 10’ ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது.
நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், விண்ணில் செலுத்தி வருகிறது.

அதன்படி தற்போது, புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும், ‘ஜிஐசாட் – 1’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ, வடிவமைத்துள்ளது. இதை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., – எப் 10 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை, 5:43 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

மொத்தம், 2,268 கிலோ எடை உடைய, ஜிஐசாட் – 1 செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ள, நவீன கேமராக்கள், புவி பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து, இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

மேலும், வானிலை நிலவரங்களை கண்காணித்து, புயல் உள்ளிட்ட, இயற்கை பேரிடர் காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.

dinamalar