கைகுலுக்காதீங்க: வணக்கம் சொல்லுங்க – மோடி யோசனை

புதுடில்லி: மக்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டு, இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தார். அதேபோல், மக்கள் அதிகம் கூடாமல் இருப்பதற்காக ஹோலி பண்டிகை நிகழ்ச்சியையும் ரத்து செய்தார்.

மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம், குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் 6,200 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 7 அன்று, மக்கள் மருந்தக நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஜெனரிக் மருந்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம்.

இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் நாட்டு மக்களிடம் கேட்டு கொள்வது, தயவு செய்து கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற வதந்திகளையும், உண்மைக்கு மாறான செய்திகளையும் நம்பாதீர்கள். அதில் இருந்து விலகியே இருங்கள். கொரோனா வைரஸ் குறித்து எந்தவிதமான சந்தேகம் இருந்தாலும், அது குறித்து டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மக்கள் கை குலுக்கி வணக்கம் சொல்வதை தவிர்த்து, இருகரம் கூப்பி வணக்கம் சொல்லுங்கள்.

மத்திய அரசின் மக்கள் மருந்தக கடைகள், நாடு முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் மக்களுக்கு உதவி செய்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை மக்கள் சேமிக்க உதவுகிறது. மலிவான விலையில் தரமான மருந்துகளை பெற்று, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகிறார்கள். இந்த மக்கள் மருந்தக நாள் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல. கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவதை கொண்டாடும் நாளாகும். இந்த திட்டத்தி்ன் மூலம், மருத்துவ சிகிச்சை பெறும் செலவும் குறையும், மருந்துகள் வாங்கும் செலவும் குறையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விழிப்புணர்வு: இதனிடையே, பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களை செல்போனில் அழைத்தால் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவிக்கவும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

dinamalar