சென்னை :தி.மு.க.,வில், ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் இன்று(மார்ச்7) மாலை 4.45 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.
தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன், 97, வயது முதிர்வு காரணமாக, கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம், 24ம் தேதி முதல், உடல் நலக்குறைவு காரண மாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு டாக்டர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல், அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது.
இந்நிலையில், நேற்று இரவு, மருத்துவமனைக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சென்றார். அன்பழகனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம், அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். ‘வயது முதிர்வு காரணமாக, அவரது உடல், மருத்துவ சிகிச்சையை ஏற்கவில்லை’ என, டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். நேற்று நள்ளிரவு, சிகிச்சை பலனின்றி, காலமானார்.
மறைந்த அன்பழகன் உடல் மருத்துவமனையில் இருந்த கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
42 ஆண்டுகள் தி.முக.. பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 9 முறை எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ளார். திராவிட இயக்க உணர்வாளராகவும், சிந்தனையாளராகவும் விளங்கினார். தி.மு.க.வை அண்ணாதுரை நிறுவிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
அஞ்சலிதிமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை மீண்டும் அஞ்சலி செலுத்தினார். அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினி, திமுக எம்.பி., கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருநாவுக்கரசர், நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
7 நாள் துக்கம்
அன்பழகன் மறைவையொட்டி கட்சி சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. கட்சி நிகழ்ச்சிகள் ஒருவாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
dinamalar