தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் வரலாற்று படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் குவிகிறது. ஏற்கனவே நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன.
ஸ்ரீராமராஜ்ஜியம், சைரா நரசிம்ம ரெட்டி போன்ற புராண சரித்திர கதைகளிலும் நடித்துள்ளார். தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் ‘மூக்குத்தி அம்மன்’ பக்தி படத்தில் விரதம் இருந்து நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கன்னடத்தில் தயாராகும் ராஜவீர மடகாரி நாயகா என்ற சரித்திர கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருந்தாலும் கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக சூப்பர் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படம் 10 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கன்னடத்துக்கு போகிறார். இந்த படத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கிறார். சுமலதா, ரம்யா ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
maalaimalar