இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் இந்த வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியா, ஈரான் நாடுகளிலும் கொரோனா வைரஸ் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டுக்காரர்கள் வரும் விமான நிலையங்கள், துறைமுகங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. என்றாலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்ட தொடங்கி உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரசுக்கு பலியாகி விட்ட நிலையில் 12 மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மிக அதிகமானோர் இருக்கிறார்கள். இதனால் இந்த மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
நேற்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. இன்று காலை கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா மாநிலத்தில்தான் அதிகப்பட்சமாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. மேலும் கொரோனா அறிகுறிகளுடன் 4,180 பேர் அந்த மாநிலத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,910 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் உச்சக்கட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கேரளாவில் ஏற்கனவே பறவைக்காய்ச்சலும் படாதப்பாடு படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசும் சேர்ந்து இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் சபரிமலை, குருவாயூர் உள்பட முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள், சந்தைகள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக உள்ளது.
கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 பேரும், உத்தரபிரதேசத்தில் 10 பேரும், டெல்லியில் 6 பேரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 3 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜஸ்தான், தெலுங்கானா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் மற்ற யாரும் தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் ஒரு மாதத்துக்கு தடுக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அனுமதி பெற்று வருபவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களை தடுத்து தனி இடங்களில் தங்க வைப்பதற்காக இந்தியா முழுவதும் 7 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகரிலும் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.
சில மாநில அரசுகள் தங்களது எல்லைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளன. மணிப்பூர், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் உள்பட சில மாநிலங்கள் பள்ளி – கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் தமிழத்தில் அதிகபட்ச உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 1,288 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் 10 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் முழுமையாக குணம் அடைந்து விட்டார். எனவே தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்ற நிலை நிலவுகிறது.
என்றாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பற்றி மக்கள் மத்தியில் இனம் புரியதாத பயம் இருக்கிறது. முக்கிய இடங்களில் முக கவசம் அணிந்து செல்வது அதிகரித்துள்ளது.
சந்தைகள், ஓட்டல்களில் மக்களின் கூட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக சிக்கன், மட்டன் மூலம் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது.
சிக்கன், மட்டன் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அசைவ உணவுகளில் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்று சர்வதேச அமைப்புகள் அறிவித்துள்ளன. உலக சுகாதார நிறுவனமும் தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறது.
இந்தியர்கள் பீதி அடைய தேவையில்லை. அதுபற்றிய விழிப்புணர்வை புரிந்து கொண்டால் போதும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ள கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.