சிறையில் இருக்கும் மகனுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு

வீட்டுக் காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் உமர் அப்துல்லாவை இன்று சந்தித்தார்.

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இதை எதிர்த்து காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரிவினைவாத குழுக்களின் தலைவர்களும் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்களும் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பரவலாக ஈடுபட்டனர்.

போராட்டங்கள் மேலும் பரவாத வகையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதளங்களுக்கான இணைப்புகள் மற்றும் கைபேசி இணைப்புகளும் சில மாதங்கள் முடக்கி வைக்கப்பட்டது.

காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் பலர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சமீபத்தில் வலியுறுத்தின.

இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் நேற்று ரத்து செய்யப்பட்டது.

வீட்டுக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட பரூக் அப்துல்லா தனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சுமார் 7 மாதங்களாக ஸ்ரீநகர் கிளைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லாவை இன்று சந்தித்துப் பேசினார்.

maalaimalar