குடியுரிமை திருத்த சட்டம் : தமிழக அரசு இன்று ஆலோசனை

சென்னை குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு வரும்படி, தமிழக அரசு சார்பில், முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்கு, அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தினரிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க, தமிழக அரசு சார்பில், தலைமை செயலர் சண்முகம் தலைமையில், இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்கு, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் கடிதம் அனுப்பி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:’குடியுரிமை திருத்த சட்டம் – 2019′ தொடர்பாக, பொது மக்களிடையே, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் இடையே ஏற்பட்டிருக்கும், சந்தேகங்களை களையும் வகையில், முஸ்லிம் தலைவர்களை நேரில் அழைத்து, கலந்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, இன்று மாலை, 4:00 மணிக்கு, சென்னை தலைமை செயலகம், பழைய கட்டடம், இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில், கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், தவறாமல் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

dinamalar