இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்வு- 14 பேர் டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

புதுடெல்லி: சீனாவில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது.

சீனாவில் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய 3 நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் உள்ள பகுதிகளில் மக்கள் முக கவசம் அணிந்தபடி செல்கின்றனர்.

நேற்று நாடு முழுவதும் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 147 பேரில் டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் உள்ளது. அங்கு 3 வெளிநாட்டவர்கள் உள்பட மொத்தம் 41 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 27 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டெல்லி 10, உத்தர பிரதேசம் 16, அரியானா 14, கர்நாடகா 11,  லடாக் 8, தெலுங்கானா 5, ஆந்திரா, ஒடிசா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.

maalaimalar