உடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்

சென்னை: சென்னையில் டைரக்டர் விசு(74) உடல்நல குறைவு காரணமாக நேற்று(மார்ச் 22) காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த விசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

விசு தமிழ்த் திரைப்பட டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆவார். 1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரேவற்பு பெற்றது.

இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் இரங்கல்:

துணை முதல்வர் ஓபிஎஸ் தனது இரங்கல் செய்தியில், ‘இயக்குநரும், நடிகருமான விசு, காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பன்முக திரைக்கலைஞர் விசுவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் இரங்கல்:

திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், ‘விசுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்’ எனக்கூறியுள்ளார்.

ரஜினி இரங்கல்:

விசுவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

dinamalar