டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் 5 மாநிலங்கள் முடக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கி விட்டது.

இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

தற்போது 82 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த 82 மாவட்டங்களிலும் முழுமையாக முடக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த 5 மாநிலங்களிலும் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

குஜராத், மேற்குவங்காளம், காஷ்மீர், புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்கு வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடி சீல் வைத்துள்ளன.

82 மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. எனவே தனிமைப்படுத்தப்படும் மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மராட்டியம், கேரளா, அரியானா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பீகாரில் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. உத்தரபிர தேசத்தில் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேகாலாயா மாநிலத்தில் வணிக வளாகங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக சோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் 13,520 பாசஞ்சர் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ, மின்சார ரெயில் சேவைகளும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. 31-ந்தேதி வரை ரெயில் சேவைகள் எதுவும் நடக்காது என்பதால் நாடு முழுவதும் ரெயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்றாலும் மக்களின் நலன் கருதி சரக்கு ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் நடைபெறும் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதன்படி டெல்லியில் மளிகை கடைகள், பழ கடைகள், காய்கறி கடைகள், பால் பூத்துகள், கேஸ் விநியோகம், தொலை தொடர்பு சேவை, உணவு வழங்கும் பிரிவு, எலக்ட்ரானிக் வர்த்தகம், வங்கிகள், ஏ.டி.எம்.கள், மருத்துவமனைகள், மருந்து விற்பனை கடைகள் ஆகியவை மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்தில் 10 சதவீதம் மட்டும் இயங்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

maalaimalar