புதுடில்லி: கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலான நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
- நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும்.
ஏழைகள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியாவில் எவரும் பசியில் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.
பிரதம மந்திரி கரீப் கல்யான் ஆன் யோஜனா’ திட்டத்தின் கீழ் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். மேலும் 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.
கொரோனாவிற்கு எதிராக போராடும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு காப்பீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 8.69 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் தவணையான 2000 ரூபாய் ஏப்ரல் முதல் வாரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள 5 கோடி பேரின் ஊதியம் ரூ.182லிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்படும். அவர்களுக்கு கூடுதலாக 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் 3 கோடி பேருக்கு தலா ரூ.1000 இரு தவணையாக 3 மாதங்களுக்கு வழங்கப்படும்.
வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 வழங்கப்படும்.
உஜ்வாலா திட்டத்தில் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு உள்ள பயனாளிகளுக்கு 3 மாதம் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 7 கோடி பெண்களுக்கு, அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும் கடன் 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
dinamalar