புதுடில்லி: டில்லியில் மார்ச் முதல் வாரத்தில், ‛தப்லீக் ஜமாஅத்’ என்னும் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மூத்த மத குருக்கள் உட்பட சிலர் சவுதி அரேபியா, மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாடு முடிவடைந்ததும், பங்கேற்பாளர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு புறப்பட்டனர். அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த 26ம் தேதி இறந்தபிறகு தான், மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று பரவிய அபாயம் தெரியவந்தது. இந்த மாநாடு நடந்த நிஜாமுதீன் பங்களாவாலி மசூதியில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 2,000 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மாநாட்டில் பங்கேற்ற, தமிழகம், தெலுங்கானா, கேரளா, மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பில் இருப்பவர்களும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதில், 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 1000 பேர் தொற்று அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தப்லிகி ஜமாஅத்தின் தலைமையகம்
தெற்கு டில்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள சூபி துறவி நிஜாமுதீன் ஆலியா மற்றும் காலிப் அகாடமியின் தர்காவுக்கு அருகில் பாங்லேவாலி மசூதி என்று அழைக்கப்படும் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. குறுகிய இரும்பு நுழைவு வாயிலை கொண்ட உயரமான கட்டடமாக உள்ளது. அங்கு மக்கள் ஒன்றுக்கூடும் மத சொற்பொழிவு அறை, ஒரு பெரிய சமையலறை மற்றும் ஷூ ரேக்குகளும் கொண்டதாக உள்ளன.
முதல் மாடியில் ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் பெரிய மண்டபம் அமைந்துள்ளது. நேற்றும் (மார்ச் 30) அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
டில்லி, டில்லியில் நேற்று புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்ட 25 பேரில் 18 பேர் இந்த சபையில் கலந்து கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 2 பேர் வெளிநாட்டினர். சபையுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சுமார் 300 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.
வெளிப்படையான தோல்விகள்
- ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னரே தப்லிக் ஜமாஅத் நிகழ்வு நிறுத்தப்பட்டது. அதற்கு முன்னர், மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- கொரோனா அறிகுறிகளை கண்டறிய வெளிநாட்டினரையும் பார்வையாளர்களையும் ஸ்கேன் செய்ய எதுவும் செய்யப்படவில்லை.
- நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள், பிற மாநிலங்களில் நோய்வாய்ப்பட்ட பின்னரும் எச்சரிக்கை விடப்படவில்லை.
- அப்பகுதியில் வசிப்பவர்களை ஸ்கேன் செய்ய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவில்லை.
டில்லி கார்ப்பரேஷன் செய்தது என்ன
டில்லி கார்ப்பரேஷன் சார்பில் 54 தொழிலாளர்கள் மற்றும் டேங்கர்களில் 30 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினிகளை பயன்படுத்தி சுத்தம் செய்துள்ளது. அறிகுறிகளைக் கொண்டவர்களை பரிசோதிக்க தப்லிகி ஜமாஅத் தலைமையகத்தின் முன்பு முகாம் அமைத்துள்ளது.
சவால்கள்
நிஜாமுதீன் சூபிக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 20,000க்கும் அதிகமான பகுதியில் வசிப்பவர்கள், வருகை தருகின்றனர். அவர்கள் அனைவரும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் சோதனையிட வேண்டியது மிகப்பெரிய சவாலாகும்.
போலீசார் செய்தது என்ன
- முழு பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
விருந்தினர் மாளிகைகள் அல்லது தங்குமிடங்களில் வசிப்பவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்கள் சோதனையிடப்படுகின்றனர்.
உள்ளூர்வாசிகள் வெளியே வராமல் இருக்க கேட்டுக்கொண்டுள்ளனர். அதனை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
dinamalar