இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு- 102 பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நேற்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இரவு  நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் கேரளா தற்போது முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 198 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 87 பேருக்கும், குஜராத்தில் 59 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 48 பேருக்கும், கர்நாடகாவில் 83 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 47 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

maalaimalar