பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் ஆன்லைனில் இலவசமாக நடன பயிற்சி அளிக்க தயாராகி உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல் என்று பலரும் நேரத்தை கழிக்கிறார்கள். இவர்களுக்காக தூர்தர்ஷன் ‘ராமாயணம்’ தொடரை மறு ஒளிபரப்பு செய்கிறது. ‘சக்திமான்’ தொடரையும் ஒளிபரப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச நடனம் சொல்லி கொடுக்க தயாராகி உள்ளார். இதற்காக பிரத்யேகமான இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் 2 இலவச நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் மாதம் முழுவதும் இலவச நடன பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “இப்போது அனைவரும் கஷ்டமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஊரடங்கு தவிர்க்க முடியாதது. இந்த நேரத்தில் எனது குழுவினர் மூலம் நடன பயிற்சி அளிக்கிறேன். ஏப்ரல் 30-ந்தேதி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.
dailythanthi