கொரோனாவால் பாதித்த ஒருவர் 406 பேருக்கு நோயை பரப்புகிறார் – மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியாமல் மக்கள் செல்லும் காட்சி

கொரோனாவால் பாதித்த ஒருவர் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் 406 பேருக்கு நோய் பரவிவிடும் ஆபத்து உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிர் பலிகளும் உயர்ந்து வருகிறது. நோயை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு மற்றும் சமூக விலகல் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் நோய் பரவுதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே சமூக விலகலை மிக கடுமையாக கடைபிடிக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ்அகர்வால் கூறியதாவது:-

சமூக விலகல் திட்டத்தை சரியாக பின்பற்றாவிட்டால் நோய் பரவுவதை தடுப்பது கடினமாகும். சமூக விலகல் திட்டம் பல இடங்களில் சிறப்பாக கடைபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்திருக்கிறது.

கிழக்கு டெல்லி, ஆக்ரா, கவுதமபுத்தா நகர், மும்பை போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நல்ல முடிவு கிடைத்துள்ளது.

இதை பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களிலும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் 406 பேருக்கு நோய் பரவிவிடும் ஆபத்து உள்ளது என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளது.

ஆனால் அதே நபர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் 30 நாட்களில் 2½ நபர்களுக்கு தான் நோயை பரப்புவார். எனவே சமூக விலகல் மற்றும் ஊரடங்கு முறைகளை சரியாக பின்பற்றினால் நோயை கட்டுப்படுத்தி விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

malaimalar