செவிலி பணியாற்றும் தாய்- 3 வயது சிறுமி பாசப்போராட்டம்

தாயும் சிறுமியும் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி.

கொரோனா சிறப்பு வார்டில் செவிலியராக வேலை பார்க்கும் பெண்ணும், அவருடைய 3 வயது குழந்தையும் மருத்துவமனை முன்பு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பெலகாவியில் நடந்துள்ளது.

பெலகா: கர்நாடகத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் வீட்டிற்கு செல்லாமல் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து வேலைப்பார்த்து வருகிறார்கள்.

இதனால் அவர்கள் வீட்டில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரை பார்க்க முடியாத நிலை உள்ளது. மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் தங்கள் குழந்தையை பார்க்க முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். இதுபோன்று கொரோனா சிறப்பு வார்டில் செவிலியராக வேலை பார்க்கும் பெண்ணும், அவருடைய 3 வயது குழந்தையும் மருத்துவமனை முன்பு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பெலகாவியில் நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் பின்வருமாறு:- பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (வயது 31). இவருக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளாள். சுனந்தா பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சுனந்தா, தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார். இதனால் அவர் கடந்த 15 நாட்களாக வீட்டுக்கு செல்லவில்லை.

நீண்ட நாட்களாக தாயை பார்க்காமல் சுனந்தாவின் குழந்தை ஐஸ்வர்யா பரிதவித்து வருகிறது. அந்த குழந்தை தினமும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் கூறி கதறி அழுது வந்துள்ளாள். இந்த நிலையில் நேற்று, ஐஸ்வர்யாவை அவளுடைய தந்தை, தனது மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து சுனந்தாவுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். சுனந்தா, கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வருவதால், தூரத்தில் நின்றப்படி தாய் சுனந்தாவை தனது குழந்தைக்கு அவர் காண்பித்துள்ளார். சுனந்தாவை பார்த்ததும், குழந்தை ஐஸ்வர்யா, ‘அம்மா… அம்மா.. வா.. மா.. போகலாம்…’ என்று கதறி அழுதுள்ளாள். தனது குழந்தை அழுவதை பார்த்தும், நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தையை பார்த்தும் தன்னால் அவளை தூக்கி கொஞ்ச முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சுனந்தாவும் கண்ணீர் விட்டு அழுதார்.

தாய்-மகளின் இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் சுனந்தாவின் பணியை பாராட்டி வருகிறார்கள்.

malaimalar