ஒடிசா தொழிலதிபர் தயாரித்த மலிவு விலை வெண்டிலேட்டர்

செயற்கை சுவாச கருவிகளை (வெண்டிலேட்டர்) ஒடிசா தொழிலதிபர் மலிவு விலையில் தயாரித்து இருப்பதாக கூறியுள்ளார்.

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பலசோர் நகரை சேர்ந்தவர் சகில் அசம்கான் (வயது 52). இவர், ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். அத்துடன், சி.டி.ஸ்கேன் எந்திரங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும் தொழிலும் செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் செயற்கை சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்) பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்திற்கொண்டு, இவர் அதற்கான உதிரி பொருட்களை சந்தையில் இருந்து வாங்கி, தானே ஒரு செயற்கை சுவாச கருவியை உருவாக்கி உள்ளார்.

தனது கருவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி செய்தால், தலா ரூ.6 ஆயிரத்துக்கு செயற்கை சுவாச கருவிகளை உற்பத்தி செய்து, அரசுக்கு வினியோகிக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 செயற்கை சுவாச கருவிகளை தன்னால் தயாரிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

malaimalar