பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு பீரங்கிகளால் தாக்கி அழிப்பு – இந்தியா அதிரடி நடவடிக்கை

இந்திய படையினர் அதிரடி தாக்குதல்

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்கு முற்றிலும் நாசமானது.

ஸ்ரீநகர்: இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில் அதற்கு இடையூறு அளிக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த வருடம் இதுவரை போர் ஒப்பந்தத்தை மீறி 1200 தாக்குதல்களை நடத்தி உள்ளது. அதுவும் சமீப காலமாக இதன் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹெரான் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தது.

இதை கண்டறிந்த இந்திய படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

ஆனால் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். எனவே அந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டத்தை ராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் எல்லைக்கு அப்பால் தீவிரவாதிகள் ஆயுதக்கிடங்கு ஒன்றை அமைத்து முகாமை உருவாக்கி இருப்பது தெரியவந்தது.

நேற்று இரவு அந்த இடத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 155 மி.மீ. போபர்ஸ் பீரங்கி, 105 மி.மீ. பீரங்கி ஆகியவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்கு முற்றிலும் நாசமானது. முகாமும் பலத்த சேதம் அடைந்தது.

உடனே பாகிஸ்தான் தரப்பில் இருந்து எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்புக்கும் இடையே கடும் பீரங்கி தாக்குதல் மற்றும் துப்பாக்கி சண்டை நடந்தது. விடிய விடிய இந்த தாக்குதல் நீடித்தது.

ஆனால் இந்திய தரப்பில் உயிரிழப்போ மற்ற சேதங்களோ இல்லை. இந்தியா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த தீவிரவாதிகள் முகாமை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்துள்ளனர். அந்த படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலால் எல்லை பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எல்லை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள 778 கி.மீ. எல்லைப் பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

malaimalar