அரசு டாக்டர் ஒருவர் பகலில் மருத்துவமனையில் பணி முடித்து விட்டு இரவில் சாலை ஓரம் ஒரு வாரம் வரை காரிலேயே தூங்கியுள்ளார்.
போபால், மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள ஜே.பி. அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர், சச்சின் நாயக். அவருக்கு மனைவியும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். போபால் நகரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் டாக்டர் சச்சின் நாயக், இரவில் வீடு திரும்புவது இல்லை. காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையை படுக்கை போல் சாய்த்து, அதிலே தூங்கிவிடுவார்.
அதற்காக காரில் தண்ணீர், சோப்பு, பேஸ்ட், பிரஷ் மற்றும் லேப்டாப் போன்றவை வைத்து கொள்வார். நேரம் கிடைக்கும் போது சாலை ஓரத்தில் சிறிது நேரம் நடந்து கொள்வார். மனைவி, மகளிடம் செல்போனில் பேசிக்கொள்வார்.
இவ்வாறாக அவர் ஒருவார இரவுகளை சாலை ஓரத்தில் காரிலே கழித்தார். தன்மூலம் கொரோனா தொற்று மனைவிக்கோ, மகளுக்கோ வேறு யாருக்கோ பரவி விடக்கூடாது என்பதோடு தனது மருத்துவ பணிக்கும் பாதகம் வந்துவிடக்கூடாது என்பதில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு, எச்சரிக்கையாக இருந்தார்.
தற்போது மருத்துவமனை சார்பில் டாக்டர்கள், ஓட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சச்சின்நாயக்கும் செவ்வாய்க்கிழமைக்கு பிறகு ஓட்டலில் தங்குகிறார். டாக்டர் சச்சின்நாயக் காரில் தங்கி இரவை கழித்த செய்தி, முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தெரியவந்தது. அவர் டாக்டரை பாராட்டி இருக்கிறார்.
“கொரோனாவுக்கு எதிராக போரிடும் உங்களை போன்றவரை இந்த மாநிலமும் நானும் பாராட்டுகிறோம். சச்சின் உங்கள் உணர்வுக்கு ஒரு சல்யூட்” என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
dailythanthi